2011ல் தேமுதிக எதிர்க்கட்சியானது போன்று, எங்கள் அணியிலுள்ள பாஜகவுக்கு ஆசை வந்திருக்கிறது என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 

கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ ;- பாஜகவுக்கும் திமுகவுக்கும் போட்டி என்றால் அது ஆட்சிக்கு யார் வருவது என்பதற்கானது அல்ல. தேர்தலில் யார் 2-வது இடத்துக்கு வருவது என்றே திமுகவுக்கும் பாஜகவுக்கும் போட்டி என்றார். 

2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக எங்களது கூட்டணியில் இருந்தது. அதனால், அப்போது அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். அந்தத் தேர்தலில் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கவில்லை. அந்த வகையில் எங்களோடு இருக்கும் காரணத்தால் பாஜகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கும்.

அதன் காரணமாகத்தான் அதிமுக தலைமையில் நாங்கள் தேர்தலை சந்தித்து எதிர்க்கட்சியாக வருவோம் என்று தான் மறைமுகமாக வி.பி.துரைசாமி சொல்லியுள்ளார்.விரைவில் மூத்த நிர்வாகிகள் வெளியேறுவர் என்ற மு.க.அழகிரியின் கருத்து திமுகவில் பிரதிபலிக்கும். ஏனென்றால் அங்கு குடும்ப அரசியல் நடக்கிறது என தெரிவித்துள்ளார்.