அதிமுகவுக்கு இலையுதிர் காலம் தொடங்கிவிட்டது என கூறியுள்ள, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை நமது அம்மா நாளிதழ் கடுமையாக விமர்சித்து  பதிலடி கொடுத்துள்ளது.  இது குறித்து அதில் கூறியிருப்பதாவது,

மிஸ்டர் தொர... நல்லார் ஒருவரின் கரங்களில் நாடு இருக்க அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்ற புது மொழியாக எடப்பாடியாரின் நல்லாட்சியில் வருணபகவான் மாநிலமெங்கும் பூமாரி பொழிகிறான். பருவ மழையை வரவேற்க ஏற்கனவே ஏரி குளங்கள் எல்லாம் காலத்தே தூர்வாரப்பட்டு கரிகாலன் காலத்தை அவை கண்முன்னே நிறுத்தியதால் எங்கள் உழவன் வீட்டில் உதித்த முதல்வரால் கண்மாய் குளங்கள் எல்லாம் இன்று கடல் போல காட்சியளிக்கின்றன. இனி எப்போதும் கழகத்திற்கு இலையுதிர் காலம் என்பதே கிடையாது என்பதற்கு முன்னோட்டம் தான் விக்ரவாண்டியிலும், நாங்குநேரியிலும் திமுகவை தலா 50 ஆயிரம்  வாக்குகளுக்கும்  மேலான வித்தியாசத்தில் விரட்டி  விரட்டி வெளுத்தெடுத்த வெற்றி  பதக்கங்கள். 

கழகம் தொடங்கப்பட்டு அதன் பொன்விழாவை அடுத்த ஆண்டு கொண்டாட இருக்கும் நிலையில், ஏற்கனவே ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்து மக்களின் ஏகோபித்த பேராதரவோடு தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அண்ணா திமுக இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் கழகம்தான் தமிழகத்தை ஆளும் என்கிற எங்கள் கம்பீர தாயின் கடைசி சூலூரையை நிறைவேற்றிக் காட்டும். இதற்காக நாங்கள் தெம்போடு கொடி பிடிப்போம், தேவையெனில் உயிர் கொடுப்போம் எனும் கழக ஒருங்கிணைப்பாளர்களின் இருவரது அறைகூவலை ஏற்று ஒன்றரை கோடி சிப்பாய்களையும் கலகத்திற்கு ஆயத்தமாகி விட்டனர். 

இவையெல்லாம் தெரிந்ததால்தான் உங்கள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்களில் ஒருவரான ஓடுகாலி தங்க தமிழ்ச்செல்வன் ஊடகங்களைக் கூட்டி வைத்து இந்தத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று இதயத்தில் இருந்த உண்மையை பொதுவில் கொட்டிவிட்டு போயிருக்கிறார். அதனால எங்களுக்கு  ஒரு நாளும் இலையுதிர் காலம் கிடையாது. சூரியனுக்கு தான் சோதனை, திமுகவுக்கு தமிழகத்து மக்கள் நிரந்தரமாய் முடிவுகட்டும் நேரம் நெருங்கிவிட்டது. அப்பனுக்கு பின் மகன், மகளுக்கு பின் பேரன் என்று வம்சாவளி ஆட்சியை நடத்தி விடலாம் என்று வாய்பிளந்து நிற்கும் திமுகவுக்கு கிடைக்கப்போவது வாய்க்கரிசிதான். ஆஇஅதிமுக இது வெல்ல பாயும் குதிரை, புள்ளையும் பார்க்காது. கொள்ளையும் நோக்காது, கூடவே  உம்மைப் போன்ற கோமாளிகளின் கருத்துக்கும் செவி சாய்க்காது என கூறப்பட்டுள்ளது.