The cause of corruption in the prosecution government!

தமிழக அரசின் வரிவருவாய் மொத்தமாக வீழ்ந்ததற்கு காரணமே 
பினாமி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் இந்த அரஸின் ஊழலே காரணம் என ராமதாஸ் கூறியுள்ளார்.

2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வணிகவரி வருவாய் ரூ.73,000 கோடியாக உயர்ந்திருப்பதாக வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு எதுவும் இல்லை. மாறாக, வணிகவரி வருவாய்க்கான இலக்கை எட்ட முடியாமல் அரசு தோல்வியடைந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2017-18 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அந்த ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ.99,590 கோடியாகவும், வணிகவரி வரிவாய் ரூ.77,234 கோடியாகவும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த இலக்கை தமிழக அரசால் எட்ட முடியவில்லை. 2017-18ஆம் ஆண்டில் தமிழக அரசின் வணிக வரி வருவாய் ரூ.73,000 கோடி மட்டுமே. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ரூ.4,234 கோடி, அதாவது 5% குறைவாகும். அதேபோல், சொந்தவரி வருவாய் ரூ.97 ஆயிரம் கோடியைக் கூட எட்ட முடியவில்லை. சொந்த வரி வருவாயாக ரூ.99,590 கோடி ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.98,673 கோடியை ஈட்ட முடியும் என்று நடப்பாண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் நம்பிக்கை தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், குறைக்கப்பட்ட இலக்கைக் கூட எட்ட முடியாமல் தமிழக அரசு பின்தங்கியுள்ளது.

வணிகவரி வருவாய் வசூல் இலக்கை விட சுமார் 5000 கோடி அளவுக்கு குறைந்து விட்டது ஒரு புறமிருக்க, அந்த வருவாயின் பெரும்பகுதி ஆரோக்கியமான வழிகளில் வந்ததல்ல என்பது தான் குறிப்பிடத்தக்கது. வணிகவரி வருவாயில் பாதியளவு, அதாவது ரூ.36 ஆயிரம் கோடி மது விற்பனை மற்றும் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மூலம் கிடைத்தவை ஆகும்.

பெட்ரோல் மீது 34 விழுக்காடும், மது வகைகள் மீது 58 விழுக்காடும் வரி வசூலிப்பதன் மூலம் தான் இந்த அளவுக்காவது வருவாய் ஈட்ட முடிந்திருக்கிறது. தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, பெட்ரோலும், டீசலும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறைக்கு கீழ் கொண்டு வரப்பட்டால் தமிழகத்தில் வணிக வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும். அதன்பின் ஜி.எஸ்.டி வருவாயில் மத்திய அரசு வழங்கும் பங்கைக் கொண்டு தான் தமிழக அரசு நிர்வாகத்தை நடத்த வேண்டியிருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தமிழகத்தில் மக்கள் நலனுக்கான திட்டங்களை எதையும் மாநில அரசால் செயல்படுத்த முடியாமல் போகும்.

மாநில அரசின் வருவாய் ஆதாரமாக இருந்த பலவகையான வரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்று விட்ட நிலையில் வரி அல்லாத வருவாய் ஆதாரங்களை அதிகரிப்பது தான் சிறந்த வழியாகும். ஆனால், 2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வரி அல்லாத வருவாய் ரூ.10,000 கோடிக்கும் குறைவாகவே உள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் கூட தமிழக அரசின் வரி அல்லாத வருவாய் இலக்கு ரூ.11,301 கோடி என்ற குறைந்த அளவிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஆற்று மணல், தாது மணல், கிரானைட் ஆகிய இயற்கை வளங்களை எடுத்து விற்பனை செய்தாலே ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வருவாயை ஈட்ட முடியும். ஆனால், தமிழக அரசோ அதில் பத்தில் ஒரு பங்கு வருவாயைக் கூட ஈட்டாததற்கு ஊழல் தான் காரணமாகும்.

தமிழகத்தில் சுரங்கத் தொழிலுக்கான வாய்ப்புகள் குறைவு என்பதாலும், பெரும்பாலான அரசு சேவைகள் கட்டணம் இல்லாமலோ அல்லது குறைந்த கட்டணத்திலோ வழங்கப்படுவதாலும் வரி அல்லாத வருவாயை அதிகரிக்க முடியாது என்று தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது. இது ஏற்க முடியாத ஏமாற்று வாதம் ஆகும். தமிழகத்தில் ஆற்று மணல் விற்பனையில் மட்டும் ஆண்டுக்கு ரூ.35,000 கோடி ஊழல் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடைபெறும் மணல் விற்பனையின் மதிப்பு ரூ.50,000 கோடிக்கும் அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறும் நிலையில் மணல் விற்பனையில் தமிழக அரசுக்கு கிடைக்கும் வருமானம் ரூ.86.33 கோடி மட்டும் தான்.

கிரானைட் மற்றும் தாதுமணல் விற்பனையின் மொத்த மதிப்பில் ஒரு விழுக்காடு கூட அரசுக்கு கிடைப்பதில்லை. இதில் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் இயற்கைவளக் கொள்ளையர்களாலும், ஆட்சியாளர்களாலும் பங்கிட்டுக் கொள்ளப் படுகிறது. தமிழகத்தில் வரி அல்லாத வருவாய் மிகவும் குறைவாக இருப்பதற்கு இதுவே காரணமாகும்.

அரசுத்துறையில் காணப்படும் ஊழல்களை ஒழித்தால் தமிழக அரசின் ஒட்டுமொத்த வருவாயை இப்போது இருப்பதை விட இரு மடங்காக, அதாவது ரூ.1.76 லட்சம் கோடியிலிருந்து மூன்றரை லட்சம் கோடியாக உயர்த்த முடியும். தமிழகத்தை கொள்ளையடித்து ருசி கண்டவர்கள் தமிழகத்தை ஆளும் வரை இது சாத்தியமல்ல. இந்த நிலை மாறி புதியதோர் தமிழகம் விரைவில் மலரும். அப்போது தமிழ்நாடு செழிப்பான, அனைத்து மக்களும் அனைத்து வசதிகளுடன் வாழும் முன்னேறிய மாநிலமாக திகழும் என்பது உறுதி.