சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுக-விலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வம்  தொடர்ந்த வழக்கையும் வேறு நீதிபதி முன்பாக பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ரவிச்சந்திரபாபு பரிந்துரைத்துள்ளார்.

2017ஆம் ஆண்டில் பேரவைக்குள் குட்கா பொருட்களை கொண்டு சென்றது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.-க்களுக்கும், திமுக-விலிருந்து நீக்கபட்ட கு.க.செல்வத்திற்கும் விளக்கம் கேட்டு பேரவை உரிமைக்குழு இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியது. 

அந்த நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.-க்கள் தொடர்ந்த வழக்கை விசாரிக்க முடியாது என அவற்றை வேறு நீதிபதிக்கு பரிந்துரைத்தார். பின்னர் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், வழக்கு குறித்து பேரவை தலைவர், செயலாளர், உரிமைக்குழு மற்றும் அதன் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இந்நிலையில் திமுக-விலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வமும் நோட்டீஸை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தபோது, கு.க.செல்வம் வழக்கையும் வேறு நீதிபதி முன்பாக பட்டியலிடும்படி உத்தரவிட்டுள்ளார்.