அம்புட்டுதானா அம்மா பாசம்?: ஜெயலலிதாவை அலட்சியம் செய்யும் அமைச்சர்கள். 

*    தினகரன் ஒரு தரிசுக்காடு. அவரிடம் இருப்பவர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிடுவார்கள் விரைவில். அவர்கள் நேராக எங்களிடம்தான் வருவார்கள்:  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. 

(தினகரன் தரிசுக்காடு ஓ.கே. நீங்க வாராவாரம் போயி ஆரவாரமா பேட்டிக் கொடுக்கிற உங்க விருதுநகர் மாவட்டம் என்ன பூத்துக் குலுங்கும் சோலைவனமா? ரெண்டு முறை இந்த மாவட்டத்தோட அமைச்சரா இருக்கீங்க, உங்களாலே இந்த மாவட்ட மண்ணுல பத்து மரம் நட்டு வளர்க்கப்பட்டுதுன்னு இருந்தா அடையாளம் காட்டுங்க பார்ப்போம்.)

*    மீடியாக்கள் தங்கள் சானலின் ரேட்டிங் ஏறுவதற்காக அங்குமிங்குமாக மாற்றி மாற்றி எதையாவது கேட்டு பரபரப்பை கிளப்புகிறீர்கள். இந்த முயற்சியில் நான் தலையிட விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின். 

(அண்ணே நீங்களும் சானல் நடத்துறீங்க. உங்க டி.வி.யும் இதே பிரஸ்மீட்ல இருக்குது, உங்காளுங்களும் இதே வேலையை எதிர்கட்சி தலைவர்களிடம் பண்ணுறாங்க. இந்த சூட்சமமெல்லாம் உங்க டிரெயினிங்தானாண்ணே?)

*    ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க. இருக்காது., அழிந்துவிடும்! என்று சொன்னவர்கள் எல்லாம் தற்போது அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்தால்தான் அரசியல் எதிர்காலம் என்று சொல்லி ஓடி வந்து கூட்டணி வைத்துள்ளனர்: சி.வி. சண்முகம். 
(தல, தாறுமாறு தல. பா.ம.க., பி.ஜே.பி. ரெண்டையும் உள்ளே வந்து உட்கார வெச்சுட்டு, கதவை மூடிட்டு அடி பின்னிப் பேத்தெடுக்குறீங்க பாருங்க, நீங்க கெத்து. 
ஆனா ஜெயலலிதாவுக்கு பிறகும் நாங்க தில்லா இருக்குறோமுன்னு நீங்க சொல்றதை ‘அம்மா ஒண்ணும் பெரிய சக்தி இல்லை. அவங்க இல்லாமலும் எங்களால கட்சி நடத்தமுடியுமுன்னு சி.வி.எஸ். ஆணவமா பேசுறாரு, அம்மாவை அவமரியாதை பண்றாரு’ன்னு உங்க கட்சிக்காரங்களே கொளுத்திப் போடுறதை கவனிச்சீங்களா?)

*    தே.மு.தி.க.வை கேவலப்படுத்தும் வகையில் தி.மு.க. நடந்து கொண்டது அரசியல் நாகரிகம் அல்ல. அரசியல் கட்சிகளுக்குள் பேசுவதை வெளியில் சொல்லக்கூடாது:    அமைச்சர் ஜெயக்குமார். 
(அது கெடக்கட்டும், இதையெல்லாம் பத்தி ஒன்றரை கிலோமீட்டர் நீளத்துக்கு பேசுற நீங்க, ‘2011ல் அ.தி.மு.க. ஜெயித்து, ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா முதல்வரானதும் தே.மு.தி.க.வால்தான்.’ அப்படின்னு பிரேமலதா போட்டுப் புரட்டுனதை பத்தி ஒரு வார்த்தையும் நீங்க கொதிச்ச மாதிரி இல்லையே. அம்புட்டுதானா அம்மா பாசம்?)

*    தி.மு.க. தன் கூட்டணியில் எனக்க்கு இடம் ஒதுக்க தயாராக இருந்தாலும், ராமதாஸ், விஜயகாந்த் போல் நான் அவமானப்பட விரும்பவில்லை. தி.மு.க.வும் ‘பெரியண்ணன்’ போலத்தான் நடந்து கொள்கிறது: த.வா.க. வேல்முருகன். 
(என்ன தலைவரே இப்படி பொசுக்குன்னு ‘தி.மு.க.வேண்டாம்’ன்னு சொல்லிட்டீங்க. உங்களுக்குன்னு ஒதுக்கி வெச்ச பனிரெண்டு சீட்டுகளை அவங்க யாருக்குன்னு கொடுப்பாய்ங்க? அப்ப பனிரெண்டு தொகுதிகளும் தி.மு.க. கூட்டணிக்கு தோல்வியா? அய்யகோ!...அப்படின்னு தூரத்துல விழுற அந்த கலாய்ப்பு இடிமுழக்கம் உங்க காதுல விழுதா?)