பாஜகவுக்கு எதிராக தம்பித்துரை தடாலடி காட்டி வருவது முதல்வர் எடப்பாடி சொல்லித்தான் நடக்கிறது என அமமுக துணைப்பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

 

பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பித்துரை. இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ‘’அதிமுகவுடன் மீண்டும் நாங்கள் இணையமாட்டோம். அவர்களுடன் மீண்டும் சேர வாய்ப்பில்லை. அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை.

 

பாஜகவுக்கு எதிராக தம்பிதுரை பேசுவது நாடகம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லிதான் அவர் பேசி வருகிறார் அதிமுகவுடன் அமமுக சேருவதற்கு வாய்ப்பே கிடையாது. நான் ஏற்கனவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன். தி.மு.க., மெகா கூட்டணி என எதை அமைத்தாலும் மக்களிடம் எடுபடாது. தி.மு.க. இப்போது உள்ள கூட்டணியை கூட மாற்றலாம். இதை அவர்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள். 

தி.மு.க. பயப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் நாங்கள் களத்தில் உடனே குதித்து விட்டோம். ஆனால் மு.க. ஸ்டாலின் தேர்தலை ரத்து செய்தவுடன் போட்டி போட்டு வரவேற்று அறிக்கை விட்டார். நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள்தான் வெற்றி பெறுவோம்’’ என அவர் தெரிவித்தார்.