Asianet News TamilAsianet News Tamil

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைப் படிக்க விடாமல், தடுக்க பா.ஜ.க. செய்த சதி: ஆதாரங்களை அடுக்கிய ஸ்டாலின்

பல்லாயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்ட மக்கள், கடந்த 50 ஆண்டுகளாக படிப்படியாக முன்னேறி வருவதை, சமூக மேலாதிக்கம் செய்பவர்களால், ஆட்சி அதிகாரம் பெற்றவர்களால் இன்னமும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

The BJP wants to prevent backward and downtrodden people from being educated. Conspiracy: Stalin stacked the evidence
Author
Chennai, First Published Jul 21, 2020, 2:24 PM IST

“நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ள இந்து மக்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைப் படிக்க விடாமல், முன்னேற விடாமல் தடுக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு பாடம் கற்பிப்போம், சமூகநீதியை அடைவதற்கான முட்பாதையை மாற்றிப் பண்படுத்த ஜனநாயகப் போருக்குத் தயாராவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெயிட்டுள்ளார்.  அதன் முழு விவரம்:- இந்திய அரசியல் சட்டத்தால் எழுப்பப்பட்டுள்ள அடித்தளத்தில் மிக முக்கியமான கூறு சமூகநீதி என்பதில் மாற்றுக் கருத்து இருந்திட முடியாது. அரசமைப்புச் சட்டம் மட்டுமல்ல, இந்திய நீதித்துறையின் தலைமை மன்றமான உச்சநீதிமன்றம், தன்னுடைய பல தீர்ப்புகளில் சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீட்டு உரிமையை உறுதிப்படுத்தி உள்ளது. இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பல சட்டங்களும் இதனை வழிமொழிந்து நிலைநிறுத்தி இருக்கின்றன. அத்தகைய அடிப்படைச் சிறப்பு வாய்ந்த சமூகநீதியைச் சிதைக்கும் செயலை மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செய்து வருகிறது. பா.ஜ.க. அரசு மத்தியில் உருவானது முதல், அவர்கள் இரண்டு காரியங்களில் முதன்மை கவனம் செலுத்தி வருகிறார்கள். முதலாவதாக, தங்களது மதவாத சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் தர தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள்; தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மை என்னும் ஆயுதத்தைக் கொண்டு, சிலவற்றை நிறைவேற்றியும் இருக்கிறார்கள். 

The BJP wants to prevent backward and downtrodden people from being educated. Conspiracy: Stalin stacked the evidence  

இரண்டாவதாக, சமூகநீதியைச் சாய்த்திடும் செயலைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதன் மூலமாக சமூகநீதிக்கு குந்தகம் ஏற்படுத்த முடியாது என்பதை அவர்கள் அறிவர். அதனால் வேறுபல வழிகளைக் கையாண்டு சமூகநீதியைச் சிதைக்கிறார்கள். அதில் மிக முக்கியமானது ‘நீட்’ தேர்வு. இந்தத் தேர்வின் மூலமாக பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, ஏழை - எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவுக்கு சாவு மணி அடித்து விட்டார்கள். அண்மையில் வெளிவந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, மருத்துவக் கல்வியில் சேர்ந்திருக்க வேண்டிய 27 விழுக்காடு (மத்திய அரசின் இட ஒதுக்கீடு) பிற்படுத்தப்பட்ட மாணவர்களில், 12 விழுக்காட்டினருக்கே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.  கடந்த மூன்று ஆண்டுகள் மட்டுமல்ல, இனி ஒவ்வொரு ஆண்டும், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தைத் தடுக்க, மத்திய பா.ஜ.க. அரசு பாதை வகுத்துவிட்டது. தமிழகத்தில் மொத்தம் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அமலில் உள்ளது; அதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு 20 விழுக்காடு, பட்டியலினத்தவருக்கு 18 விழுக்காடு, பட்டியல் பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு என உள்ளது. 

The BJP wants to prevent backward and downtrodden people from being educated. Conspiracy: Stalin stacked the evidence

ஆனால், இப்போது மத்திய அரசு வழங்கும் இடஒதுக்கீடு பங்கீட்டில் பட்டியலின மக்களுக்கு 15 விழுக்காடு இடஒதுக்கீடுதான் எனச் சொல்லப்பட்டுள்ளது. இதன்படி 3 விழுக்காடு இடங்களைப் பட்டியலின மக்கள் இழக்க நேரிடுகிறது. இந்த 3 விழுக்காடு இழப்பின் மூலம், ஒவ்வோர் ஆண்டும் பட்டியலின மாணவ, மாணவியர் எந்தளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை அனைவரும் உணரலாம்.  பிற்படுத்தப்பட்டோருக்கு உண்மையில் 50 விழுக்காடு தந்திருக்க வேண்டும; ஆனால் கொடுத்த 27 விழுக்காட்டையே பெற முடியாத நிலை ஒருபக்கம் என்றால், பட்டியலின மக்களுக்கு உண்மையில் தந்திருக்க வேண்டியதை விட மூன்று விழுக்காடு குறைவாகத் தருகிறார்கள். இதுதான் சமூகநீதிக்குச் சாவுமணி அடிக்க முயற்சிக்கும் சதிச் செயலாகும். “இந்துக்களுக்காக”க் குரல் கொடுக்கிறோம் என்று தொண்டை வற்றச் சப்தமிடும் பா.ஜ.க.,வினருக்கு பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துக்களாகத் தெரியவில்லையா? அவர்கள் என்ன இந்துமத எதிரிகளா? இந்துக்களுக்காக உழைப்பதாகச் சொல்லிக் கொள்வது உண்மையாக இருந்தால், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு உரிய இடங்களை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிரதமரும், மத்திய பா.ஜ.க. அரசும் வழங்க வேண்டும். இது சமூகநீதியால் பண்பட்ட மண். இன்றிலிருந்து 98 ஆண்டுகளுக்கு முன், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, வகுப்புரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்த ஆட்சி  தி.மு.க.,வின் மூலவேர்க் கட்சியான நீதிக்கட்சியின் ஆட்சி. அந்த சமூகநீதித் தத்துவத்தில் எந்த அரசு வந்தாலும், எத்தகைய பெரும்பான்மை இருந்தாலும், கை வைக்க முடியாத வகையில், கண்ணை இமை காப்பதுபோல் காத்தும், 69விழுக்காடுவரை வளர்த்தும் வந்துள்ளோம். 

The BJP wants to prevent backward and downtrodden people from being educated. Conspiracy: Stalin stacked the evidence

இத்தகைய சமூகநீதிக்கு ஆபத்து வந்தபோது 1950-ம் ஆண்டு திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்திய போராட்டத்தின் காரணமாகவும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் துணை கொண்டும், பண்டித நேரு அவர்கள் பிரதமராக இருந்தபோது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் முறையாக திருத்தம் செய்யப்பட்டது. பெரியாரும் அண்ணாவும் அன்று நடத்தியதை ஒத்த மாபெரும் போராட்டக் களத்துக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களையும், பட்டியலின மக்களையும் மத்திய பா.ஜ.க. அரசு கழுத்தை நெரித்துத் தள்ளுகிறது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கட்சிகள், தோழமைக் கட்சிகள், சமூகநீதித் தத்துவத்தில் ஆர்வம் உள்ள அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குவோம். மக்கள் மன்றத்தில் நாம் எழுப்பும் குரல், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து பேரதிர்வுகளை ஏற்படுத்துவதாக அமையும். இந்த நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ள மக்களை (அவர்களின் கணக்குப்படி சொல்வதானால் ‘இந்து’ மக்களை) படிக்க விடாமல், முன்னேற விடாமல், வேலைக்குத் தகுதிப்படுத்தாமல், வேலையைத் தடுக்கும் - தட்டிப் பறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு பாடம் கற்பிப்போம். பல்லாயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்ட மக்கள், கடந்த 50 ஆண்டுகளாக படிப்படியாக முன்னேறி வருவதை, சமூக மேலாதிக்கம் செய்பவர்களால், ஆட்சி அதிகாரம் பெற்றவர்களால் இன்னமும் தாங்கிக் கொள்ள முடியாமல் தடைக் கற்கள் போடப்படுவதை நினைக்கும் போது வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

The BJP wants to prevent backward and downtrodden people from being educated. Conspiracy: Stalin stacked the evidence

அனிதா உள்ளிட்ட ஏழு உயிர்களை இழந்ததற்குக் காரணம், இந்த சமூகநீதி மறுக்கப்பட்டதால் தானே?இடஒதுக்கீடு பறிபோகும் விவகாரத்தில் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு எப்போதும் போல் அடிமை மனப்பான்மையுடன் அதனைத் தாரைவார்த்துவிடாமல், பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரையும் திராவிடம் என்ற பெயரையும் தாங்கி நிற்பதை நினைத்தாவது கொள்கைக்காக குரல் கொடுக்க வேண்டும்.சட்டநீதிக்கு இணையானது சமூகநீதி; அதைக் காப்பது அவசியம். எப்போதெல்லாம் இடஒதுக்கீட்டைப் பறிக்கிறார்களோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் சட்டவிரோத செயல்களின்மூலம், சமூகத்தில் உட்பூசல்களை ஏற்படுத்துவார்கள். பாதிப்புகளால் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக பிளவுபடுத்துவார்கள். தங்களது சதியை மறைக்க திசைதிருப்பும் நாடகங்களை அரங்கேற்றுவார்கள். இவற்றையெல்லாம் கண்டு மனம் பறிகொடுத்து தமிழ்ச் சமூகம் ஏமாந்துவிடும் என்று எதிர்பார்ப்போர் தோற்றோடுவர். கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள் தங்களது கல்வி உரிமைக்காகவும், வேலை உரிமைக்காகவும் உறுதியுடன் போராட முன்வர வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறேன். கல்விக்கான - வேலைக்கான உரிமை மட்டுமல்ல; அதிகாரத்தை அடைவதற்கான உரிமை; அதிகாரத்தில் பங்கேற்பதற்கான உரிமை; அரசியல் சட்டம் நமக்குக் கொடுத்த உரிமை; பா.ஜ.க. அரசால் தட்டிப் பறிக்கப்படும் உரிமை.அந்த உரிமையை மீட்க ஒன்றிணைவோம் வாரீர் என்று மீண்டும் அழைக்கிறேன். என அதில் தெரிவிக்குப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios