அம்பேத்கரும் மோடியும் என்ற தலைப்பில் ப்ளூகிராப்ட் டிஜிட்டல் பவுன்டேஷன் வெளியிட்ட புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை கண்டால் அம்பேத்கரே பெருமைபடுவார் என இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக இரு வேறு கருத்துகள் எழுந்துள்ளன. இதனிடையே இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். யுவன்சங்கர் ராஜாவின் பதிவு தற்போது சமூகவலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

இளையராஜா வரிசையில் இயக்குநர் பாக்யராஜு பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார். சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். குறை பிரசவம் என பாக்யராஜ் பயன்படுத்திய வார்த்தை மாற்றுத்திறனாளிகளை கொதிப்படைய செய்துள்ளது.
இளையராஜா விவகாரம் நாளுக்கு நாள் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. நாளுக்கு நாள் இந்த பிரச்சினை பெரிதாகி கொண்டே வந்த போதிலும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த கருத்தை தான் திரும்ப பெற மாட்டேன் என இளையராஜா திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் எந்தவித பதவிக்காகவும் நான் அவ்வாறு புகழ்ந்து பேசவில்லை. புத்தகத்தை நன்கு படித்த பிறகுதான் முன்னுரையே எழுதினேன் என விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் மதுரை நகரில் பல இடங்களில் மோடி மற்றும் அம்பேத்கர் படத்திற்கு நடுவே இளையராஜா நின்று இரு தலைவர்களின் கைகளை இணைப்பது போல போட்டோஷாப் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் ஜாதி, மதம், மொழி கடந்து இசை நம்மை ஒன்றிணைக்கும் இசை ஞானி இளையராஜாவும் கூட என்ற வாசகத்துடன் மாநகர பாஜக கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
