தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிகள் கட்சிகள் புறக்கணித்துள்ளன. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக தேநீர் விருந்துக்கு வராத காரணத்தால் மக்கள் வரிப்பணம் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தேநீர் விருந்தை புறக்கணித்த முதலமைச்சர்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தொடர்ந்து ஆளுநரை வற்புறுத்தி வந்த நிலையில் இன்று காலை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து பேசினர். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சரிடம் ஆளுநர் தெரிவித்த கருத்தை கூறினர். இதனையடுத்து ஆளுநர் மாளியை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக மாணவர்கள் நலனுக்காக நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு 208 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இந்த மசோதா மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, சட்டமன்ற மான்பை ஆளுநர் காக்கவில்லை என கூறினார், எனவே ஆளுநர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார். இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநரின் தேனீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தன.

அண்ணாமலை கண்டனம்

இந்தநிலையில் தமிழக ஆளுநர் விருந்து நிகழ்வில், முதலமைச்சர் கலந்து கொள்ளாதது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பது என்பது மரபு சார்ந்த விஷயம் என கூறினார். தமிழக சட்டமன்ற கூட்டத்தில்நடைபெற்ற நிகழ்வில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டு உரையாற்றியதாக தெரிவித்தார். தமிழக அரசு எழுதி கொடுத்ததை வரி மாறாமல் ஆளுநர் படித்ததாகவும் கூறினார். அதில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்கியத்தையும் ஆளுநர் படித்தார். இதற்கு தான் அப்பொழுதே கடும் கண்டனம் தெரிவித்து இருந்ததாக கூறினார். ஆனல் ஆளுநரோ, அமைச்சரவையின் மாண்பை கருதி அந்த புத்தகத்தை அப்படியே படித்ததாக கூறினார். தமிழக அமைச்சரவை எழுதிக் கொடுத்த உரையை மாற்றி விடக் கூடாது என்பதற்காக அந்த உரையை ஆளுநர் அப்படியே படித்தார். அப்போது தமிழக ஆளுநருக்கு மாண்பு இருந்தது இப்போது மாண்பு இல்லையா என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

டீ செலவு மிச்சம்

தமிழக மக்கள் காதில் திமுக தொடர்ந்து பூ சுற்றிக் கொண்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். அனைத்து நிகழ்வுகளையும் அரசியல் செய்ய வேண்டும் என்று திமுக திட்டமிடுவதாகவும் அண்ணாமலை கூறினார். தமிழக மக்களுக்கான முதலமைச்சர் தான் ஸ்டாலின், திமுக உறுப்பினர்களுக்கான முதலமைச்சர் இல்லை என்பதை ஸ்டாலின் அவ்வப்போது மறந்து விடுவதாக தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் என்பவருக்கு தேநீர் சாப்பிட அழைப்பு விடுக்கவில்லையென்று தெரிவித்தவர், தமிழக முதலமைச்சருக்கு தான் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழக ஆளுநரிடம் இருந்த 11 மசோதாக்களையும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவித்தவர், தமிழக ஆளுநரிடம் எந்தவித மசோதாக்களும் நிலுவையில் இல்லையென கூறினார். தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள் என கூறினார். திமுக தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாததால் ஆளுநருக்கு டீ செலவு மிச்சமாகியுள்ளதாகவும், மக்கள் வரிபணம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.