மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என பாஜக- அதிமுக தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். 

தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாயலத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பா.ஜ.க சார்பாக போட்டியிட்ட, ஐந்து தொகுதிகள் நிலவரம் குறித்து பேசப்பட்டிருக்கிறது. அப்போது சிலர், நமக்கு தேர்தல் வேலை பார்க்க, ஆளுங்கட்சி நிர்வாகிகளே, பணம் கேட்டு நச்சரித்தார்கள். ஒரு கட்டத்தில், பணம் தந்தால் மட்டுமே, வேலையே பார்க்க முடியும்' என திட்டவட்டமாக சொல்லி விட்டார்கள் என சில நிர்வாகிகள் புலம்பி உள்ளனர். 

'ஜெயலலிதா இருந்தபோது, எல்லாரும் பயந்து, கூட்டணி கட்சி வெற்றிக்கு உழைப்பார்கள். இப்போது, அந்தக் கட்சியில் யாருக்கும், தலைமை மீது பயம் இல்லாமல் போய்விட்டது எனவும் கூறி இருக்கிறார்கள். உடனே ''தைரியமாக இருங்கள். 30 தொகுதிகளுக்கு மேல் நமது கூட்டணி தான் வெற்றி பெறும் என மேல் மட்டத்தலைவர்கள் உற்சாகப் படுத்தி இருக்கிறார்கள். 

இதே போல் அதிமுகவிலும் உற்சாகம் ஊட்டப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடியும், பெரம்பலுார் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிவபதியும், 20 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். சமீபத்தில், முதல்வரை, சிவபதி பார்த்து, தன் தொகுதி நிலவரம் குறித்து கவலையுடன் பேசி இருக்கிறார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ’'கவலையே படாதீங்க. 30 தொகுதிக்கு மேல் நமக்கு தான் வெற்றி கிடைக்கும்' என உற்சாகப்படுத்தி இருக்கிறார். 

சொல்லி வைத்தாற்போல இரு கட்சி முக்கியத் தலைவர்களும் 30 தொகுதிகளில் வெற்றி உறுதி எனக் கூறி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.