ஓபிஎஸ்யை பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.! அவருக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு- ஜெயக்குமார்
ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெறும் போது தமிழக முதலமைச்சர் அண்டை மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்தியது தார்மீக அடிப்படையில் தவறு என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு பொதுமக்களை செல்ல விடாமல் ஆங்காங்கே சாமியான பந்தல்,சேர் போட்டு தினசரி ஆயிரம் ரூபாய் கூலி கொடுத்து மூன்று வேலை பிரியாணி போட்டு அவர்களை அமர வைத்து விடுவதாக குற்றம்சாட்டினார்.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக முறைகேடு
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் தொடர்பாக பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு நடைபெறும் அத்துமீறல்கள் தொடர்பாக புகார் அளிக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமைச் செயலகம் வந்திருந்தார். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் மனுவை கொடுத்த அவர் அதில் திமுக தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டுவதாக குற்றம் சாட்டி இருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், திருமங்கலம் ஃபார்முலா போல ஈரோடு கிழக்கு தொகுதிக்கு புது பார்முலாவை திமுக உருவாக்கி இருப்பதாகவும் அதன்படி அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு பொதுமக்களை செல்ல விடாமல் ஆங்காங்கே சாமியான பந்தல்,சேர் போட்டு தினசரி ஆயிரம் ரூபாய் கூலி கொடுத்து மூன்று வேலை பிரியாணி போட்டு அவர்களை அமர வைத்து விடுவதாகவும் குற்றம்சாட்டினார்.
வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்
இதனால் அதிமுகவிற்கு செல்லும் பொதுமக்களின் கூட்டத்தை தடுக்க சதி செய்யப்படுவதாக விமர்சித்தார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் இந்த காலகட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்டை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு அங்கிருக்கும் எஸ் பி-களை அழைத்து ஆலோசனை நடத்துவது தார்மீக அடிப்படையில் தவறு என தெரிவித்தார். ஈரோட்டை சுற்றியுள்ள மற்ற மாவட்டங்களில் இருந்து கள்ள ஓட்டு போட ஆள் இறக்குவது, வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் சப்ளை செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு திமுகவினர் செல்வார்கள் அவர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என அறிவுறுத்தவே இந்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது என குற்றம் சாட்டி பேசினார்.
ஓபிஎஸ்யை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை
மேலும் ஓ.பன்னீர் செல்வத்தை பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லையென தெரிவித்தவர், அவருக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பினார்.மேலும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் திமுக கொடியோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இயேசு கிறிஸ்துவின் படத்தை அச்சடித்து துண்டு பிரசுரமாக விநியோகித்து வாக்கு சேகரித்து வருவதாகவும் இப்படி பல்வேறு விதிமுறைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார். தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயக முறையிலும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டவர், இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
ஈரோடு இடைத்தேர்தல் பரபரப்பு புகார்..! திமுகவின் 10 பணிமனைகளுக்கு சீல் வைத்த தேர்தல் ஆணையம்