துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு சால்வை அணிவிக்க முயன்றதை அமைச்சர் வீரமணி தடுக்க முயன்றதால் அவரை முன்னாள் ஒன்றிய செயலாளர் அடிக்கப்பாய்ந்தார். 

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துனை முதல்வர் ஓ.பிஎஸ் 3 நாட்கள் பிரச்சாரத்தில்  ஈடுபட்டுள்ளார். நேற்று ஒடுகத்தூர் பேருந்து நிலையத்தில் பேசினார்.  அதனை தொடர்ந்து லத்தேரி பேருந்து நிலையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக ஓ.பி.எஸ் தயாரானார். அப்போது மேடையின் வலது ஓரம் நின்று இருந்த முன்னாள் ஒன்றிய செயலாளரும், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளருமான ஜனார்த்தனன் வேகமாக மைக் முன் வந்து ஓ.பிஎஸுக்கு சால்வை அணிவிக்க முயன்றார். 

இதனை கவனித்த அமைச்சர் வீரமணி அவர் பேசி முடித்த பிறகு சால்வை அணிவிக்கலாமே என நினைத்து அவரை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த ஜனார்த்தனன் ‘யாரை தடுக்கிறாய்? என்று கேட்டபடியே அமைச்சரை அடிக்கப்பாய்ந்தார். இதை எதிர்பாராத அமைச்சர் வீரமணி சற்று பின் வாங்கினார்.

 

உடனே மேடையில் இருந்த நிர்வாகிகள் சுதாரித்து ஜனார்த்தனனை தடுத்தனர். பின்னர் மைக்கில் அவர் பின்னர் மைக்கில் அவர் பெயரை சொல்லி பன்னீர்செல்வத்துக்கு சால்வை அணிவிக்க ஏற்பாடு செய்தனர். சால்வையை பெற்றுக் கொண்ட ஓ.பி.எஸ் அதனை ஜனார்த்தனுக்கே போர்த்தினார். இதையடுத்து அமைச்சர் வீரமணிக்கும் ஜனார்த்தனன் சால்வை அணிவிக்க முயன்றார். ஆனால் வீரமணியோ வேண்டாம் என்று தடுத்து விட்டார்.

இதனால் அந்த சால்வையை ஜனார்த்தனன் திரும்ப எடுத்துச் சென்றார். இந்நிலையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர் சீனிவாசனை எச்சரிப்பது போல அமைச்சர் வீரமணி கைகாட்டினார். அடுத்தடுத்து அரங்கேறிய இந்த சம்பவங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.