அப்பா ஒரு பக்கம்... மகன் மறுபக்கம்.. அதிமுகவா.? பாஜகவா.? முடிவு எடுக்க முடியாமல் திணறும் பாமக
நாடாளுமன்ற தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ளதையடுத்து, பாஜக- பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவுடன் கூட்டணிக்கு ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அன்புமணி ராமதாஸ் முடிவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தொடரும் கூட்டணி இழுபறி
நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கூட்டணி உடன்பாடு தொகுதி பங்கீடு ஆகியவை ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. பாஜகவை பொறுத்தவரை இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலில் வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சியும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இன்னமும் அதிமுக மற்றும் பாஜக தங்களது கூட்டணியை இறுதி செய்யாமல் உள்ளது. இதுவரை அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம், மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. அதிலும் தேமுதிக மதில் மேல் பூனையாகவே உள்ளது. எந்த நேரமும் பாஜக பக்கம் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.
பாஜக- பாமக இழுபறி
இதேபோல பாஜக கூட்டணியில் தற்போது வரை தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, ஜான்பாண்டியன் மற்றும் தேவநாதன் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது. மேலும் பாமகவிடமும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதே நேரத்தில் பாமகவின் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருவதால் அதிமுகநடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
அந்த வகையில் பாமகவிற்கு அதிமுக ஏற்கனவே 7 மக்களவை தொகுதி ஒதுக்குவதற்கு சம்மதம் தெரிவித்து விட்டது. ஆனால் மாநிலங்களவை சீட்வேண்டும் என அன்புமணி ராமதாஸ் விடாப்பிடியாக இருக்கிறார்.இதன் காரணமாக பாமக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக நிறுத்திவிட்டது. அதே நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே ஒரு புரிதல் இருந்து வருவதன் காரணமாக ராமதாசை பொருத்தவரைக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விருப்பப்பட்டு வருகிறார்.
அமைச்சர் பதவிக்கு அச்சாரம் போடும் அன்புமணி
ஆனால் அன்புமணி ராமதாஸ் தனது எதிர்காலத்தை கருதி பாஜகவுடன் செல்வதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பாஜகவை பொறுத்தவரை வடமாவட்டங்களில் 10 மக்களவைத் தொகுதியை பாமகவிற்கு தருவதற்கு தயார் என தெரிவித்து விட்டது. அதே நேரத்தில் பாமகவின் ராஜ்யசபா மற்றும் மத்திய அமைச்சர் பதவி தொடர்பான கோரிக்கைக்கு உறுதி அளிக்க முடியாது எனவும் கூறிவிட்டது. இருந்த போதும் அன்புமணி பாஜக கூட்டணிக்கு செல்லவே விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை பாமக நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும், தற்போது உள்ள நிலையில், அதிமுக கூட்டணியே சிறந்தது என கூறி வருகின்றனர்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு
இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்க பாமகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாஜக கூட்டணிக்கு பாமக நிர்வாகிள் எதிர்ப்பு தெரிவிப்பதால் கூட்டணி தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடிப்பதாலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
மத்திய அரசுக்கு ராமருன்னா.. தமிழக அரசுக்கு முருகர்; யாருக்கு சொந்தம் முருகர்? திரளும் மாநாடு!!