மத்திய அரசுக்கு ராமருன்னா.. தமிழக அரசுக்கு முருகர்; யாருக்கு சொந்தம் முருகர்? திரளும் மாநாடு!!
தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகன் குறித்து சர்வதேச மாநாடு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியில் பாஜக இருக்கிறது. ஆனால் அதே நேரம், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முருகனை கையில் எடுத்துள்ளது. ஆம்.. தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகன் குறித்து சர்வதேச மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை கொண்டு இந்த மாநாடு வரும் ஜூன் அல்லது ஜூலையில் நடைபெற உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இதுகுறித்து பேசிய போது “ முருகன் தொடர்பான கண்காட்சிகள், மாநாடுகள், ஆய்வறிக்கைகள் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும்." என்று கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் முருகனை கையில் எடுப்பது இது முதன்முறையல்ல.. மாநில பாஜக தலைவராக எல். முருகன் இருந்த போது 2020-ம் ஆண்டு பாஜக வேல் யாத்திரைகளை நடத்தியது. அதே போல் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தமிழ் கடவுள் முருகனை முப்பாட்டன் என்று குறிப்பிட்டு வருகிறார். மேலும் முருகனின் வழித்தோன்றதால் தமிழ் மக்கள் என்று கூறி வருகிறார். ஆனால் திமுக முருகனை கையில் எடுப்பது இதுவே முதன்முறை..
ஆனால் திமுகவின் இந்த நடவடிக்கையை பாஜக விமர்சித்துள்ளது. பாஜகவின் மாநில செயலாளர் ஆர். ஸ்ரீனிவாசன் இதுகுறித்து பேசிய போது “ முதலில் திமுக மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து, அதில் ஸ்டிக்கர் ஒட்டி கொண்டது. அவர்கள் தற்போது எங்கள் கொள்கைகளை காப்பி அடித்து அரசியல் செய்து வருகின்றனர்.” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் “ நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் முருகனை வணங்கி வரும் நிலையில், அவரை தமிழ்நாட்டில் மட்டும் சுருக்கிவிட முடியாது. தமிழக மக்கள் இதுபோன்ற சூழ்ச்சிகளை நம்பி ஏமாறமாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
ஆனால் சர்வதேச முருகன் மாநாடு நடத்துவதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ திமுக அரசு பதவியேற்ற முதல் முருகன் கோயில்களுக்கு நிதி ஒதுக்கி வருகிறது. நாங்கள் சிவனை வழிபடும் அதே நேரத்தில் பெருமாளையும் வழிபடுவோம். திருச்செந்தூர் முருகன் கோயில் புதுப்பிக்க ரூ.300 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது” என்று தெரிவித்தார்.