கொடைக்கானலில் 11ஆம் வகுப்பு மாணவியை காதலித்து கோயம்புத்தூருக்கு அழைத்து சென்ற இளைஞனை போக்சோ  சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. காதலிப்பதைபோல் நடித்து ஏமாற்றி பெண்களை சீரழிப்பது, பணத்திற்காக காதலிப்பதைபோல நடிப்பது. விதவை மற்றும் கணவனை பிரிந்துள்ள பெண்களை குறிவைத்து தகாத உறவு வைத்துக்கொள்வது. காதலிக்க மறுக்கும் பெண்களை அடித்து கொலை செய்வது. போன்ற பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க காவல்துறை எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் இந்த வகை குற்றங்கள் குறைந்தபாடில்லை. 

அந்தவரிசையில் கொடைக்கானலில் 11ஆம் வகுப்பு மாணவியை காதலித்து ஏமாற்றி தலைமறைவான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாக்கியபுரத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியை காணவில்லை என பெற்றோர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் கடந்த 15ஆம் தேதி புகார் அளித்தனர், அந்த புகாரின்  அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவியை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது 11ஆம் வகுப்பு மாணவியும் பாக்கியபுரத்தை சேர்ந்த சாம்சன் (22) என்ற இருவரும் காதலித்து வந்தது தெரியவந்தது. 

மேலும் அவர்கள் இருவரும்  கோயம்புத்தூர்க்கு  சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கொடைக்கானல் போலீசார் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள விடுதியில் இருந்த இருவரையும் மீட்டு கொடைக்கானலுக்கு அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து 16 வயதுடைய  11ஆம் வகுப்பு மாணவியை அழைத்து சென்ற இளைஞனை  கொடைக்கானல் போலீசார்  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அந்த பெண் பத்திரமாக அவரசு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.