Thanthai Periyar Kazhagam to ask for divorce for marriage conducted by RSS
லவ்வர்ஸ்டே தினத்தில், இந்துத்துவா அமைப்பு நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம் செய்து வைத்திருந்த நிலையில், விவாகரத்து கேட்டு, தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோவை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.
நேற்று உலகம் முழுவதும் லவ்வர்ஸ்டே கொண்டாடப்பட்டது. இந்தியாவில் லவ்வர்ஸ் டேக்கு எதிராக இந்து முன்னணி, பஜ்ரங்தள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. சில அமைப்புகள் கையில் தாலியுடன் சென்று காதலர்களை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு காதலர்கள் மீது தாக்குதல்களும் நடத்தினர்.

லவ்வர்ஸ்டே தினமான நேற்று, கர்நாடக சலுவாலி வட்டாள் பக்ஷா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், இரண்டு ஆடுகளுக்கு திருமணம் செய்து வைத்தார். காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிக்கு மாநில அரசு ரூ.50,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என்றும், காதலர் தினத்தை விடுமுறை நாளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்துத்துவா அமைப்பினர் லவ்வஸ்டே தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், விலங்குகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். நாய்க்கும், கழுதைக்கும், திருமணம் செய்வது, நாய்கும், ஆட்டுக்கும் திருமணம் செய்வது என்று பல்வேறு கூத்துகள் அரங்கேறின.

இந்த நிலையில், இந்துத்துவா அமைப்பு நேற்று திருமணம் செய்து வைத்த நாய்க்கும், ஆட்டுக்கும் விவாகரத்து கேட்டு, கோவை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் ராமகிருஷ்ணன் இந்த மனுவை அளித்துள்ளார். நீதிமன்றத்தில் மனு கொடுக்க வந்தபோது, நாய்க்கும், ஆட்டுக்கும் கழுத்தில் மாலை போட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்திருந்தனர்.
அந்த மனுவில், காதலர் தினத்தில் நாய்க்கும் ஆட்டுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் திருமணம் செய்து வைத்துவிட்டனர்; இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லாததால் விவாகரத்து வாங்கித் தருமாறு அதில் கூறியுள்ளனர்.
