- Home
- Tamil Nadu News
- அடிமாடாய் போன தேமுதிக.. திமுகவில் 4 சீட்டு..! பேராசையால் மண்ணைக் கவ்விய பிரேமலதா..!
அடிமாடாய் போன தேமுதிக.. திமுகவில் 4 சீட்டு..! பேராசையால் மண்ணைக் கவ்விய பிரேமலதா..!
நாலாபுறமும் பேரம்பேசி கட்சியின் பெயரையும், நம்பகத்தன்மையையும் பிரேமலதா சிதைத்து விட்டார். கடைசியில் 4 சீட்டுகளுக்கு அடிமாடாய் தேமுதிகவை தள்ளி விட்டார். தேமுதிகவின் மதிப்பை மக்களிடம் குறைத்து விட்டார்’’ எனக் குமுறுகிறார்கள்.

தமிழக அரசியல் கட்சிகளில் 0.45 சதவீதமே வாக்கு வாங்கி வைத்திருக்கக்கூடிய தேமுதிகவிற்கு விஜயகாந்த் மறைவுக்கு பின் அனுதாப அலை வீசக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்பேன் என தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் அந்த மாநாட்டில் ‘‘கூட்டணி பற்றி முடிவு எடுத்துட்டேன். ஆனால், இப்போது அறிவிக்கவில்லை’’ என சஸ்பென்ஸ் வைத்து மாநாட்டையே முடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நிருபர்கள் அவரிடம் கூட்டணி குறித்து கேட்கும் போதெல்லாம் இன்னும் கால அவகாசம் இருக்கிறது. வேறுகட்சிகள் யாரும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. தேர்தல் தேதியும் அறிவிக்கவில்லை. தக்க சமயத்தில் நான் கூட்டணி குறித்து அறிவிப்பேன் சூசகமாகவே பேசிக் கொண்டு இருக்கிறார். தற்போது இறுதிக்கட்டமாக பாஜக கூட்டணியில் இணைவதற்கு பியூஸ் கோயலும், திமுக கூட்டணியில் இணைவதற்கு அமைச்சர் எ.வ.வேலுவும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். பிரதமர் மோடி வருகையின்போது தேமுதிகவை கூட்டணிகள் இணைத்து விட வேண்டும் என பியூஸ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
ஆனால் அது தோல்வியில் போய் முடிந்தது. இப்போதும் பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு வருகிறது. ஏற்கனவே ராஜ்யசபா சீட்டு தராததால் அதிமுக மீது அதிருப்தியில் இருந்த பிரேமலதா விஜயகாந்த், முதல் கட்டமாக திமுகவுடன் பேச்சுவார்த்த தொடங்கி இருக்கிறார். திமுக தரப்பில் மதிமுக 12 தொகுதிகள் கேட்டு அடம்பிடித்து வருகிறது. இந்நிலைதான் மதிமுக கூட்டணியில் சேரவில்லை என்றால் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கலாம் என அறிவாலயத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருந்தது.
தேமுதிக கூட்டணியில் சேர்வதால் திமுகவிற்கு பலம் என்ற கருத்து முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு, பிரேமலதா விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போதுதான் பிரேமலதா விஜயகாந்த் தனக்கு 20 தொகுதி தரணும். ஒரு ராஜ்யசபா சீட்டு தரணும். தேர்தல் நிதி தரணும் என மிகப்பெரிய பட்டியலையும் நீட்டி இருக்கிறார். இது குறித்து மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆறு தொகுதிகள் ஒதுக்கி தரப்படும். தேர்தல் நிதியும் தேவையான அளவுக்கு தரப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தப் பேரத்துக்கு பிரேமலதா விஜயகாந்த் ஒத்து வராததால் அதிமுக தரப்பில் ராஜேந்திர பாலாஜி மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது.
அப்போது 30 தொகுதிகள் தனக்கு தரணும். ராஜ்யசபா சீட்டு தரணும் என பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுதிருக்கிறார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்படவில்லை. இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரேமலதா விஜயகாந்த் தனக்கு 30 இடங்கள், ஒரு ராஜ்யசபா பதவி, ஒரு அமைச்சர பதவி என பல கோரிக்கைகளையும் வைத்திருக்கிறார். இதற்கு பாஜக தரப்பில் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது அடுத்த வாரம் தமிழ்நாடு தேர்தல் நிலவரம் குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு நடத்த இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரேமலதா விஜயகாந்த் தள்ளப்பட்டுள்ளார். இதற்கு இடையே டெல்லியில் இருந்து அமித் ஷா தரப்பில் பிரேமலதா விஜயகாந்திடம் பேசப்பட்டு இருக்கிறது. அப்போது தேர்தல் நிதியாக மிகப்பெரிய அளவு செலவு தொகையை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக்கொள்ளும். 20 தொகுதிகள் ஒதுக்கி தரப்படும். வேறு மாநிலத்திலிருந்து ராஜ்யசபா பதவி பெற்று தரப்படும் என பேசப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பிரேமலதா.
திமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் தேமுதிக 20 சட்டமன்ற தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கேட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது 4 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திமுக தலைமை கூறியதாகவும், 12 தொகுதிகளையாவது கொடுங்கள் என தற்போது தேமுதிக இறங்கி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் 4-லிருந்து 5 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முடியும் என திமுக உறுதியாக கூறிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருபுறமும் பேரம் பேசியதால் அதிருப்தியான எடப்பாடி பழனிசாமி இனி பிரேமலதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என முடிவிடுத்து விட்டார் என்கிறார்கள். ஆகையால் திமுகவை தவிர இப்போது பிரேமலதாவுக்கு வேறு சாய்ஸ் இல்லை. ஆகையால் திமுக கொடுக்கும் 4 சீட்டுகளுக்கு ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.
இந்நிலையில், பிரேமலதாவின் பேரத்தை சலிக்காத தேமுதிக நிர்வாகிகள், ‘‘விஜயகாந்த் என்கிற ஒற்றை முகத்துக்காகத்தான் தேமுதிகவில் இருக்கிறோம். அதை பகடைக்காயாக்கி நாலாபுறமும் பேரம்பேசி கட்சியின் பெயரையும், நம்பகத்தன்மையையும் பிரேமலதா சிதைத்து விட்டார். கடைசியில் 4 சீட்டுகளுக்கு அடிமாடாய் தேமுதிகவை தள்ளி விட்டார். தேமுதிகவின் மதிப்பை மக்களிடம் குறைத்து விட்டார்’’ எனக் குமுறுகிறார்கள்.
