தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 8000ஐ நெருங்கி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனிடையே, தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் அறிவுடைநம்பி தேர்தலின்போது முழு வீச்சில் பிரச்சாரம் செய்து, வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அண்மையில் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றார். திரும்பி வந்த பிறகு உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார். பின்னர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. 

இதனையடுத்து, தஞ்சாவூர் திலகர் திடல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்தடுத்து வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.