தங்கதமிழ்செல்வனின் ஆடியோ விவகாரம் வெளியானதை அடுத்து தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

அதிமுகவில் இருந்து தினகரனையும், சசிகலாவையும் நீக்கிய பிறகு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர்களில் தங்க தமிழ்ச்செல்வன் முக்கியமான நபராக திகழ்ந்தவர். கட்சியின் முக்கிய முடிவுகளில் தங்க தமிழ்ச்செல்வனின் ஈடுபாடு அதிகமாகவே இருந்தது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அமமுக சார்பில் தேனி தொகுதியில் அவர் போட்டியிட்டார். ஆனால், இத்தொகுதியில் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை அடைந்தார். தேர்தல் தோல்வியாலும், தலைமையின் மேல் உள்ள அதிருப்தியாலும் தங்க தமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவிற்கே செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இதனால், டிடிவி.தினகரனுக்கும், தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

 

இதனிடையே, மதுரை எம்.பி தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்ட டேவிட் அண்ணாதுரை, உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ-வும், திருப்பரங்குன்றம் அ.ம.மு.க வேட்பாளருமான மகேந்திரன் ஆகிய இருவரது தலைமையில், தேனியில் ஒரு கூட்டம் போட்டதாகவும், தங்க தமிழ்ச்செல்வனுக்குப் பதிலாக புதிய நபரை நியமிப்பது தொடர்பாக அக்கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணையப்போவதாகவும் தகவல் வெளியாகின. 

இந்நிலையில், கடும் கோபமடைந்த தங்க தமிழ்செல்வன் டிடிவி.தினகரனை ஆபாச வார்த்தைகளால் வசைபாடும் ஆடியோ ஒன்று நேற்று மாலையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அமமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று காலை தேனி மாவட்ட நிர்வாகிகளோடு தனது இல்லத்தில் டிடிவி. தினகரன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.