தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட், பாஜகவுக்கு 5 சீட், என்.ஆர். காங்கிரசுக்கு ஒரு சீட் என இதுவரை 13 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக தற்போது அதிமுகவிடம் 27 தொகுதிகள் கைவசம் உள்ளது. இதில் இன்னும் ஒரு சில இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதில் சில கட்சிகளை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அப்படி இருக்கும்போது குறைந்தபட்சம் 22 முதல் 25 இடங்களில் அதிமுக நேரடியாக தனது கட்சிக்காரர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, அதிமுகவில் போட்டியிட விரும்புகிறவர்களின் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. இதில் சுமார் 1,750 பேர் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். 

இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன், அமைச்சர் ஜெயக்குமார் மகன் மற்றும் அதிமுகவில் முக்கிய பதவியில் உள்ளவர்களின் வாரிசுகள், தற்போது எம்பியாக உள்ளவர்கள் விண்ணப்பித்துள்ளனர்


.
அதிமுக சார்பில் விண்ணப்பம் செய்தவர்களை நேரில் அழைத்து விரைவில் கலந்தாய்வு செய்ய உள்ளனர். இந்த பணியில் அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தற்போதைய அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகிய 5 பேர்தான் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும்  அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியலில் நாங்கள் தலையிட மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதையடுத்து , இந்த 5 பேர் குழுவே முடிவு செய்யட்டும் என்று கூறியுள்ளனர்.
 
அதனால், தற்போது தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள 5 பேருக்கு அதிமுக கட்சியில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. விருப்ப மனு செய்தவர்கள் பலர் தற்போது இவர்களையே சுத்தி சுத்தி வருவதாகவும் அதிமுக கட்சியினர் கூறுகிறார்கள். 

இதில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். தங்கமணி, வேலுமணி ஆகியோர் இபிஎஸ் ஆதரவாளர்கள் இதையடுத்து விருப்ப மனு அளித்தவர்கள்  இரண்டு அணிகளாக பிரிந்து இவர்கள் போகும் இடம்மெல்லாம் பின்தொடர்ந்து செல்வதாக கூறப்படுகிறது. அதுவும் தங்கமணி, வேலுமணி ஆகிய இருவரும் மிக கெத்தாக வலம் வருகின்றனர்.