அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஒரு தீவிரவாதி போல் செயல்படுகிறார் என தங்க தமிழ்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் 18 எம்.எல்.ஏ.க்கள் இல்லையென்றால் தினகரனே இல்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார். 

அதிமுகவிலிருந்து பிரிந்து டிடிவி. தினகரனுடன் இணைந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்களாக தங்க தமிழ்ச்செல்வன் வலம் வந்தவர். தினகரன் ஆதரவு நிலைப்பாட்டிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான தங்க.தமிழ்ச்செல்வன், மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பின்னால் தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகின. 

இதனிடையே, தங்க.தமிழ்ச்செல்வன் தினகரனை கடுமையாக சாடுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து. டிடிவி. தினகரன் தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் தங்க தமிழ்செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றார். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன் நான் உண்மை பேசியதால் என்னை ஊடகங்கள் பெரிதுப்படுத்தின. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஒரு தீவிரவாதி போல் செயல்படுகிறார். 18 எம்.எல்.ஏ.க்களின் குடும்பங்களும் எவ்வளவு வேதனையில் உள்ளது என்பது தினகரனக்கு தெரியும். நாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியிடம் பேசி வருவதாகவும், அவர்கள் என்னை ஆட்டிப்படைப்பதாகவும் கூறுகிறார். அவர்களிடம் நான் பேசியதே இல்லை என்றார். 

அதிமுகவை அழித்து அமமுகவால் வளர்ச்சிய அடைய முடியாது. தினகரனுடன் ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேறுபாடு இருந்தது. வீடியோ, ஆடியோ வெளியிடுவது நல்ல பண்பாடு இல்லை. அதிமுகவில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என தங்க தமிழ்செல்வன் விளக்கமளித்துள்ளார். அமமுகவில் நிர்வாகம் சரியில்லை, தினகரனுடன் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை. கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தேவையா? என தங்க தமிழ்செல்வன் கூறினார்.