தங்க தமிழ்ச்செல்வனுக்கு மனநிலை சரியில்லை, அவரது குடும்பத்தார் அவரை சரியான மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என அமமுக வெற்றிவேல் கூறியுள்ளார். 

அதிமுகவிலிருந்து பிரிந்து டிடிவி. தினகரனுடன் இணைந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்களாக தங்க தமிழ்ச்செல்வன் வலம் வந்தவர். தினகரன் ஆதரவு நிலைப்பாட்டிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான தங்க.தமிழ்ச்செல்வன், மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பின்னால் தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகின. 

இதனிடையே, மதுரை எம்.பி தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்ட டேவிட் அண்ணாதுரை, உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ-வும், திருப்பரங்குன்றம் அ.ம.மு.க வேட்பாளருமான மகேந்திரன் ஆகிய இருவரது தலைமையில், தேனியில் ஒரு கூட்டம் போட்டதாகவும், தங்க தமிழ்ச்செல்வனுக்குப் பதிலாக புதிய நபரை நியமிப்பது தொடர்பாக அக்கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியானது. 

இந்த தகவல் தங்க தமிழ்ச்செல்வனின் காதுகளுக்கு போக ஆவேசத்தின் உச்சிக்கே சென்றார். இந்நிலையில், தங்க.தமிழ்ச்செல்வன் தினகரனை கடுமையாக சாடுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக அமமுகவைச் சேர்ந்த வெற்றிவேல் கூறுகையில்இ அந்த அடியோ உண்மைதான். அவருக்கு மனநிலை சரியில்லை. வீட்டிலிருப்பவர்கள் அவரை சரியான மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறுவது சிறந்தது என்று கூறியுள்ளார்.