செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததையடுத்து அமமுக டி.டி.வி.தினகரன் அணியின் அடுத்த முக்கியத்தலையான தங்க. தமிழ்செல்வனும் ஐக்கியமாகப்போவதாக கூறப்பட்டு வந்தது இந்த நிலையில் அவர் உறுதியான விளக்கம் அளித்துள்ளார். 

டி.டி.வி.தினகரன் மீது ஏற்பட்ட அதிருப்தியால் அமமுக கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்செல்வன் கட்சி மாற உள்ளதாக தகவல்கள் கஜா புயலைவிட சுழன்றடித்து வருகின்றன. அவரிடம் அதிமுக அமைச்சர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மற்றொரு தரப்பினர் அவர் வரும் 27ம் தேதி திமுகவில் இணைவது நிச்சயம் எனவும் வதந்திகள் வட்டமிட்டன. 

ஆனால் இவை அனைத்தும் பெய்ட்டி புயலைப்போல என்கிற ரீதீயில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 
’’நான் திமுகவில் சேர விருப்பமாக திமுக ஐடி விங் வதந்தியை பரப்பி வருகிறது இதை யாரும் நம்ப வேண்டாம். நான் என்றும் தியாக தலைவி சின்னம்மா ஆணைக்கிணங்க மக்கள் செல்வர் டி.டி.வி.தினகரன் வழியில் என் பயணம் தொடரும் துரோகத்தை வீழ்த்தி எதிரியை வென்று கழகத்தையும் தமிழகத்தையும் மீட்போம் என்பது உறுதி’’ எனப் பதிவிட்டுள்ளார்.

 

இந்தப்பதிவின் மூலம் கட்சி மாறுவது தொடர்பான வதந்திகளுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தங்க. தமிழ்ச்செல்வன்.