டி.டி.வி. தினகரனை பெட்டிப் பாம்பாக அடக்குவது எப்படி என்று தனக்கு தெரியும் என தங்கதமிழ்ச்செல்வன் கூறி வருகிறார்.

டி.டி.வி. தினகரன் – தங்கதமிழ்செல்வன் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை தினகரன் யாரிடமும் இப்படி மோதியது இல்லை. ஆனால் தங்கதமிழ்ச்செல்வனை வந்து பார் என்கிறார். இதற்கு காரணம் தங்கதமிழ்ச்செல்வனை டிடிவி மிகவும் நம்பியுள்ளார். மேலும் பண விவரங்களில் கூட தங்கதமிழ்செல்வனை தான் தினகரன் அதிகம் நம்பியிருந்துள்ளார். 

தினகரனின் உதவியாளர்களுக்கு தெரியாத சில டீலிங்குகள் கூட தங்கதமிழ்ச்செல்வனுக்கு தெரியும் என்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா விவகாரத்தில் தங்கதமிழ்ச்செல்வன் – செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் தான் சரியாக செயல்பட்டனர் என்பது தினகரனின் எண்ணம். ஆனால் செந்தில் பாலாஜியை விட தங்கதமிழ்ச்செல்வன் மீது தினகரனுக்கு எப்போதுமே பாசம் அதிகம். 

இதற்கு முக்கிய காரணம் தங்கதமிழ்ச்செல்வனும் – தினகரனும் ஒரே சமுதாயம் அதாவது கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதனால் கட்சியின் முக்கிய முடிவுகளை எல்லாம் தங்கத்தை கலந்து கொள்ளாமல் தினகரன் எடுத்தது இல்லை. திடீரென அவர் தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன் தென்மாவட்டத்தில் உள்ள அமமுக நிர்வாகிகளை ஒட்டு மொத்தமாக கட்சி மாற்றும் நடவடிக்கையில் தங்கம் ஈடுபட்டது தினகரனை அதிர வைத்துள்ளது.

 

இதனால் தங்க தமிழ்ச்செல்வன் குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளாசியுள்ளார் டிடிவி. இதற்கு முன்பு நாஞ்சில் சம்பத், செந்தில் பாலாஜி உள்ளிட்ட எத்தனையோ பெருந்தலைகள் அமமுகவில் இருந்து விலகியுள்ளன. ஆனால் அப்போது எல்லாம் தினகரன் தனது அக்மார்க் புன்னகையுடன் செய்தியாளர்களை அசால்ட் செய்துள்ளார். ஆனால் நேற்று செய்தியாளர்கள் மீது தனது கோபத்தை கொட்டித் தீர்த்துவிட்டார். 

அதிலும் தங்கதமிழ்செல்வனை பெரியாள் ஆக்கியதுடன் அவரை அழித்ததும் ஊடகங்கள் தான் என்று தினகரன் கூறினார். மேலும் விஸ்வரூபம் எடுக்கப்போவதாக தங்கம் கூறியுள்ளார். ஆனால் அவர் என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் என்று ஒரே போடாக போட்டார் தினகரன். இது தங்கதமிழ்செல்வனை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

கட்சியில் இருந்து எத்தனையோ பேர் சென்ற போது அமைதியாக இருந்த டிடிவி தான் விலக முயற்சித்து பேரம் பேசிக் கொண்டிருக்கும் போது தனது ஆடியோவை வெளியிட்டதுடன் தான் பெட்டிப்பாம்பாக அடங்குவதாக கூறியது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து செய்தியாளர்கள் தங்கதமிழ்செல்வனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து பேசினர். அப்போது விரைவில் பெட்டிப் பாம்பாக யார் அடங்குவார்கள் என்று தெரியும் என செய்தியாளர்களிடம் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். அப்போது முதல் அவர் செல்போன் ஸ்விட் ஆஃப் மோடிலேயே உள்ளது.