நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக படு தோல்வியைச் சந்தித்தது. அதிமுகவின் வாக்குளை டி.டி.வி.தினகரன் தரப்பினர் பெருமளவு பிரிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல தொகுதிகளில் நான்கு, ஐந்தாம் இடத்தைத் தான் அக்கட்சி பிடித்தது.

ஏற்கனவே தினகரனை நம்பி 18 எம்எல்ஏக்கள் பதவி இழந்த நிலையில், தற்போது அமமுகவைச்  சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இந்நிலையில் தான் தினகரனின் வலது கரமாக செயல்பட்டு வந்த தங்க தமிழ் செல்வன், தற்போது அதிமுகவுக்கு தனது ஆதரவாளர்களுடன் தாவ தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் கொங்கு மண்டல அமைச்சர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு அவர் ஒரு நிபந்தனையையும் விதித்துள்ளதாக தெரிகிறது.  அ.தி.மு.க., சார்பில், அடுத்த மாதம், மூன்று மாநிலங்களவை  எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில், ஒன்று, பாமகவின் அன்புமணி ராமதாசுக்கு போகிறது. தமிழக பாஜக சார்பில் ஓர் இடம் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. மீதமுள்ள அந்த ஓர் எம்.பி.சீட்டை தனக்கு வேண்டும் என தங்க தமிழ்  செல்வன் கேட்டு வருகிறார்.

மூன்றாவது எம்.பி. பதவிக்கு, கட்சியின் முன்னணி தலைவர்கள் பலர் மோதி வருவதால் அதை  யாருக்கு ஒதுக்குவது என, அதிமுக மேலிடம்  குழப்பத்தில் உள்ளது. இந்நிலையில், தனக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால், அ.தி.மு.க.,வில் இணைவதற்கு தயார் என, தங்கதமிழ்செல்வன் துாது விட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், அமமுகவில் இருந்து யார் வேண்டுமானாலும் போகலாம் என கூறி அக்கட்சியின் நிர்வாகிகளை வெறுப்பேற்றியுள்ளார்.இதனைப் பயன்படுத்தி தங்க தமிழ் செல்வன் அதிமுகவுக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தங்க தமிழ்செல்வனை கட்சியில் இணைத்துக் கொள்ள நிச்சயமாக ஓபிஎஸ் தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதைத்தான் எடப்பாடி தரப்பும் எதிர்பார்க்கிறது. அதையும் மீறி அவரை கட்சியில் சேர்த்துக் கொண்டால் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் தரப்பை கட்டுப்படுத்தலாம் என கொங்கு மண்டல அமைச்சர் எடப்பாடிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதையடுத்து விரைவில் தங்க தமிழ் செல்வன் அதிமுகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.