திருப்பரங்குன்றம் தொகுதி அமமுக வேட்பாளர்  மகேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர்  தங்க தமிழ்செல்வன், இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது இடைத் தேர்தலில் 22 இடங்களிலும் அமமுகதான் வெற்றிபெறப் போகிறது. அப்போது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும். அதிமுக ஆட்சியைக் கலைப்பதற்காகத்தான் அமமுக வாக்களிக்கும். அரசில் சின்ன சின்ன ஊழல் நடந்தபோது முதல்வரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். 

ஆனால் தற்போது அதையெல்லாம் தாண்டி ஊழல் கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டது. ஊழலை மையமாக வைத்துதான் ஆட்சியே நடத்துகிறார்கள். எனவே இந்த ஆட்சியை கலைக்க விரும்புகிறோம். தினகரன் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக இந்த ஆட்சியைக் கலைப்போம் என்று தெரிவித்தார்.

தற்போது திமுகவுக்கும் அமமுகவுக்கும்தான் போட்டி. அதிமுக நான்காவது அல்லது ஐந்தாவது இடமே பிடிக்கும் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையம் குறித்த கேள்விக்கு, “தேர்தல் ஆணையம் என ஒன்று இருந்தால்தானே நடுநிலையோடு செயல்படுவதற்கு. அப்படி இருப்பது போன்று தெரியவில்லை. அனைத்தையும் அரசுக்கு சாதகமாகவே தேர்தல் ஆணையம் செய்துகொண்டிருக்கிறது என குற்றம்சாட்டினார்.

மே 23 வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் அதிமுக 1,500 நபர்களை அனுப்பவுள்ளதாகவும்,  முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதே அவர்களுக்கு பின்னடைவு வரும் என்பதால் அதிமுகவினர் பிரச்சினை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தங்க தமிழ் செல்வன் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார்