thamilisai welcome kamal hassan

மாற்றத்தை கொண்டு வரும் வகையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடிகர் கமலஹாசன் எங்களுடன் கரம் கோர்த்தால் அதை நாங்கள் வரவேற்போம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

கமலஹாசன் தீவிர அரசியலில் இறங்கியதைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருகிறார், தனது டுவிட்டர் பக்கத்தில் குரல் கொடுத்து வரும் அவரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை கடுமையாக எதிர்த்து வந்தார்.

கமலஹாசனின் ஒவ்வொரு டுவிட்டர் பதிவையும் தமிழிசை கேலியும், கிண்லும் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த கமல், விரைவில் தனது அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும், கொள்கை ரீதியில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும், தமிழக மக்களுக்கு நம்மை பயக்கும் என்றால் இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி சேர்வதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கத்தில் பாஜகவின் ஆதிதிராவிடர் அணி சார்பில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக . மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாள்களை சந்தித்தார்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பா.ஜ.க.வை மதவாத கட்சி என கூறுகிறார். சாதியவாதம் பேசும் கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி பா.ஜ.க.வை மதவாதம் என்று கூறுவது நகைப்புக்குரியது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மாற்றத்தை கொண்டு வரும் வகையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடிகர் கமலஹாசன் எங்களுடன் கரம் கோர்த்தால் அதை நாங்கள் வரவேற்போம் என்றும் தமிழிசை தெரிவித்தார்.