Thamilisai condemns Vaiko

வைகோவுக்கு கூட்டணி வைக்க காரணம் தேட முடியவில்லை என்றும், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தா. அப்போது பேசிய அவர், கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான உதவிகளை மத்திய அரசு செய்து வருவதாக கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதி அளித்ததாகவும் தமிழிசை தெரிவித்தார்.

தமிழக அரசியல், பாஜகவை மையம் கொண்டு இயங்கி வருவதாக கூறியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக திமுகவை வைகோ ஆதரிக்கிறார். திராவிட கட்சிகளை அழித்து இந்துத்வா சக்திகள் மேலோங்கக் கூடாது என்பதற்காக கூட்டணி வைப்பதாக கூறியிருக்கிறார்.

கூட்டணி வைக்க காரணம் தேட முடியவில்லை என்றால், சுயநலத்துக்காக கூட்டணி வைத்துள்ளோம் என்று சொல்லட்டும். துரோகிகள் என்று குற்றம் சாட்டியதை மறந்து கூட்டணி வைத்துவிட்டு, பாஜகவை காரணமாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்று கூறினார்.

சுறுசுறுப்பில்லாத ராகுலை சுறுசுறுப்படையச் செய்வதும், வைகோவை கூட்டணி பற்றி சிந்திக்க வைப்பதும்தானா பாஜகவின் வேலை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் தற்போது நேர்மறை அரசியலைச் செய்து வருகிறது பாஜக. எல்லோருக்கும் மையப்புள்ளியாக பாஜக உள்ளது. நீங்கள் எவ்வளவுதான் தடுத்தாலும் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்று தமிழிசை கூறினார்.