கடந்த 2016 சட்டமன்றதேர்தலில் போனால் போகிறதென்று சின்னஞ்சிறு கணக்கில் ஜெயலலிதா கூட்டணிக்கு இழுத்துக் கொண்டது மூன்றே மூன்று சிறு கட்சிகளை. அதன் தலைவர்களான தனியரசு, தமீமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகிய மூவரும் அவரது புண்ணியத்தால் எம்.எல்.ஏ.வானார்கள். 

இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் இவர்கள் மூன்று பேரையும் அணி  மாற்றிட முயற்சிகள் நடந்தன. ஆனால் இவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றிருந்ததால், அணி மாறினால் ‘கட்சி தாவல் தடை சட்டத்தின்’ கீழ் நடவடிக்கைக்கு ஆளாகி, பதவி பறிபோகும் நிலை உருவாகுமெனும் பயம் கிளம்பியது. எனவே சூழலுக்கு ஏற்ப ஆட்சிக்கு முட்டு கொடுத்தப்படி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தனர். 

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததால் இம்மூவரில் ஒருவரான தமீமுன் அன்சாரி நேரடியாக தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்தார். எடுத்ததோடு மட்டுமில்லாமல் அவர்களின் மேடையில் நின்று வாய் வலிக்க கடும் உரைகளையும் ஆற்று ஆற்றென் ஆற்றித் தள்ளினார். 

சூழல் இப்படியிருக்கையில், தி.மு.க. அணிக்கு சாதகமாகவே வாக்குப்பதிவு பெரும்பாலும் சென்றுள்ளது! என ஒரு பக்கமிருந்து கருத்துக்கள் கிளம்பியிருக்கும் நிலையிலும்,  அதை ஆளும் அணி மறுத்திருக்கும் நிலையிலும் சற்றே குழம்பிப் போனாலும் கூட அதிலும் ஆதாய மீனை பிடிக்கும் எண்ணத்தில் இருக்கும் தமீமுன் அன்சாரி...”தேசிய அளவில் ஆட்சி மாற்றம் ஏற்படவே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தோம். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்தோம். மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு தந்தால், கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுத்தால் ஏற்றுக் கொள்வேன். கொள்கைதான் முக்கியம், விமர்சனம் செய்ய மாட்டேன்.” என்று பேசியுள்ளார். 

இந்நிலையில் தமீமுக்கு நெருக்கமானவர்களோ...”அன்சாரி ஒரு அருமையான ஐடியாவை செதுக்கி வைத்துள்ளார். அதாவது வாக்குப்பதிவு தி.மு.க.வுக்கு சாதகமாக போயுள்ளதாக ஒரு தகவல் பரவியபடி இருக்கிறது. அது பொய்யாக போய் இதே ஆட்சி நீடித்தால், ‘நான் பி.ஜே.பி.யைதான் கொள்கை ரீதியில் எதிர்த்தேன். ஜெயலலிதாவின் வழியில் இதை செய்தேன்.’ என்று எடப்பாடி தரப்பிடம் பேசி எம்.எல்.ஏ. பதவியை காப்பாற்றிக் கொள்வது. 

ஒருவேளை பதவி பறிக்கப்பட்டால், இதை தி.மு.க.விடம் சுட்டிக்காட்டி பிற்காலத்தில் கூட்டணியில் சில சீட்டுகளுக்கு துண்டு போடுவது, அதேவேளையில் இப்போதே ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தால் அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் ஏதோ ஒரு வாரிய பதவியை பெறுவது! எனும் முடிவில் இருக்கிறார்.” என்கிறார்கள். ஜவாஹிருல்லாஹ்-க்கே அல்வா கொடுத்தவராச்சே தமீமுன்!