கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தனி ஆவர்த்தனம் வாசித்து வருகிறார். அவரது பேச்சுக்கள் பாஜகவுக்கு எதிராகவே அமைந்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று அடிக்கடி கூறி வருகிறார்.

மேலும் தம்பிதுரை தொடர்பாக இடங்களில் விரைவில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடக்கப் போவதாகவும் தகவல்கள் பரவின.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூட்டணி குறித்தோ, தனியாக போட்டியிடுவது குறித்தோ பேசாத நிலையில், தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி இல்லை தம்பிதுரை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில்தான் அவர், சசிகலாவை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், ஒரு எம்.பி. மூலம் அதற்காக தூது விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சசிகலா முதலில் டி.டி.வி.தினகரனை சந்திக்க சொல்லியிருக்கிறார். இதையடுத்து டி.டி.வி.தினகரனை தொடர்பு கொண்டபோது, அவர் தமப்துரை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும், ஆனால் பகல் நேரத்தில் வந்து,  தன்னை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேச வேண்டும் என நிபந்தனை விதித்தாகவும் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து விரைவில் டி.டி.வி.தினகரன் – தம்பிதுரை சந்திப்பு நிகழலாம் என்றும் தொடர்ந்து தம்பிதுரை சசிகலாவை சந்திப்பார் என கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் முக்கிய  பதவியில் இருக்கும் தம்பிதுரை அணி மாற முயற்சிப்பது எடப்பாடி தரப்பினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.