காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகம் சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் 9ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தியில் எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய மாநிலங்களவை எம்பி முத்துக்கருப்பன், முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டதால் முடிவை ஒத்திவைத்ததாக தெரிவித்தார்.

வழக்கம்போல, அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை, எம்பி பதவியை ராஜினாமா செய்வது தீர்வல்ல. மக்கள் எங்களை தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அதனால்  மக்களின் உரிமைகளுக்காகவும் நலனுக்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறோம்.

மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்துகிறார். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுக தயாராக இருக்கிறது. ஆனால், அதற்கு 50 எம்பிக்களின் ஆதரவு தேவை. நாங்கள் 37 பேர் தான் இருக்கிறோம். எனவே திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆதரவு தர தயார் என்றால், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுக தயாராகவே இருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அதிமுக கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கிறோம் என சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் சொல்வார்களா? என அதிரடியாக கேள்வி எழுப்பினார் தம்பிதுரை.