மக்களவைத் துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை கரூர் எம்.பி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்று வருகிறார். இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலை குறிவைத்து கடந்த ஒரு வருடமாக கரூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு குறைதீர்ப்புக் கூட்டங்களை நடத்தி மக்களின் கோரிக்கைகளை கேட்டுவருகிறார்.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்  அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் தம்பிதுரை. இவருக்குப் போட்டியாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.
 
இந்த நிலையில்தான் பாஜகவை எதிர்த்து தம்பிதுரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இது அதிமுக- பாஜக  ஒறவுக்கு வேட்டு வைக்கும் விதமாக உள்ளது என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுகவின் ஒரு தரப்பினர் தம்பிதுரையின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


தம்பிதுரையின் பேச்சு பாஜகவை கடுப்பாக்கியுள்ளதால்  கரூர் தொகுதியில்  அவருக்கு சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “நான் கரூரில் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவெடுக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட யார் வேண்டுமானாலும் விருப்ப மனு அளிக்கலாம். அதில் என்ன தவறு இருக்கிறது? போட்டியிடுவதற்கான முடிவை பரிசீலனை செய்வது தலைமைக் கழகம்தான் என தெரிவித்தார்.

தலைமைக் கழகம் சின்னத்தம்பிக்கு வாய்ப்பளித்தால் நாங்கள் சேர்ந்து அவருடைய வெற்றிக்காக பாடுபடுவோம். இதில் கருத்து வேறுபாடு ஒன்றும் கிடையாது” என்று தெரிவித்தார். 

“நான்தான் கரூரில் போட்டியிடுவேன் என்பதில் உறுதி ஒன்றும் கிடையாது” என்று தெரிவித்த தம்பிதுரை, பதவியை எதிர்பார்த்துக்கொண்டு நான் கரூர் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை எனவும் விளக்கினார். தம்பிதுரையின் இந்தப் பேச்சு விரக்தியின் வெளிப்பாடாகவே இருந்தது.