நாளை சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, டெல்லி செங்கோட்டையை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு- காச்ஜ்மீர் விவகாரம், சீன எல்லை விவகாரம், குடியுரிமை சட்ட மசோதா போன்ற விவகாரங்களால் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் ஏற்படக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. சுதந்திர தின விழாவுக்கு தயாராகி வரும் நிலையில், டெல்லி செங்கோட்டையை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று ஏழடுக்கு பாதுகாப்பு அமைப்பு, மைதானம் நுழையும் பார்வையாளர்களை வரவேற்கும். சிறப்பு கவச ஆடைகள் அணிந்து, சோதனை நடத்தும். கொரோனா அறிகுறி இருந்தால், வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். செங்கோட்டையைச் சுற்றி டெல்லி காவல்துறை, மத்திய ஆயுத போலீஸ் படைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக் காவல்படைகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிறுத்தப்பட்டு உள்ளனர். முக அடையாளம் காணும் தொழில் நுட்பம் கொண்ட 500 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரமாகியுள்ளன.