மத்திய அரசு போலி பாஸ்போர்ட்களை ஒழிக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கின்றது.அதாவது சிப் பொருத்தப்பட்ட இ_ பாஸ்போர்ட் வழங்க இருக்கிறது.இந்த திட்டம் நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாகும்.

அடுத்த ஆண்டில் அனைவருக்கும் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சிப் பொருத்துவதன் மூலம், ஒருவரின் வெளிநாட்டு பயணத்தை எளிதாக சேமிக்க முடிவும் என்றும், போலிகளை துல்லியமாக களைய முடியும் என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச விமான போக்குவரத்து விதிகளுக்கு உள்பட்டு இந்த இ-பாஸ்போர்ட் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக முதலில் 20,000 அரசு அதிகாரிகள் மற்றும் தூதரகங்களில் பணிபுரிவோருக்கு இ-பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குடிமக்கள் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் விநியோகிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

டெல்லி மற்றும் சென்னையில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரத்யேக கிளையை அமைத்து ஒரு மணி நேரத்திற்கு 10,000 முதல் 20,000 இ-பாஸ்போர்ட் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இ-பாஸ்போர்ட் பணிக்காக தொழில்நுட்ப நிறுவனங்களை தேர்வு செய்ய தேசிய தகவல் மையமும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் ஆலோசனை நடத்தியுள்ளன. வரும் ஆண்டு முதல் நாட்டில் உள்ள 36 பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் இ-பாஸ்போர்ட் விநியோகம் செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே இருக்கும் நடைமுறையை குலைக்காதபடி இ-பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறை திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் பாஸ்போர்ட் பெற காலதாமதம் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு ஒரு மணி நேரத்திற்கு 10,000 பாஸ்போர்ட், ஒரு நாளைக்கு 50,000 என விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் காலங்களில் ஒரு மணி நேரத்திற்கு 20,000 பாஸ்போர்ட், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் என அதிகரிக்கப்படும் என பாஸ்போர்ட் வழங்கும் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.