வயசான காலத்துல வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கலாம்ல!- என்று தர்மயுத்த நாயகர் பன்னீரின் தரப்பிலிருந்தே கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார், அதே அணியைச் சேர்ந்தவரும் பன்னீரின் முக்கிய கரமாக இருப்பருமான மாஜி அமைச்சர் செம்மலை. 

இதுதான் விவகாரம்....செம்மலையின் ஸ்டேட்மெண்ட் வீடியோ ஒன்று பரவிக் கொண்டிருக்கிறது. அதில் “நோட்டீஸுக்கு உள்ளாகியிருக்கும் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவர்கள் வேண்டுமானால் தங்களை எங்கள் கட்சின்னு சொல்லிக்கலாம், ஆனால் நாங்கள் அப்படி ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, இப்போது ஒண்ட பார்தால் எப்படி? ஏதோ இடைத்தேர்தல் தோல்வி பயத்தில் இப்படி மூன்று பேரை தகுதி நீக்கி, மெஜாரிட்டிக்கான எண்ணிக்கையை நாங்கள் குறைக்க முயல்வதாக சிலர் விமர்சிக்கின்றனர். 

அது முற்றிலும் தவறு. எங்களுக்கு எந்த தோல்வி பயமும் இல்லை. நாங்கள் நிச்சயம் வெல்வோம்.” என்றவர், கூடவே “ என் வாயிலிருந்து ஒரு நாளும் பொய்யே வராது. நான் உண்மையை மட்டுமே பேசுபவன்.” என்று கெத்தாக சுயபுராணம் பாடியிருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு எடப்பாடியார் அணிக்கு செம்ம டென்ஷன். காரணம்....மூன்று எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வரே பெரிதாய் ரியாக்‌ஷன் காட்டாமல், அமைதியாய் அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் இப்படி பன்னீரின் கையான செம்மலை ஓவர் சீன் போட்டுக் கொண்டிருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. 

ஏற்கனவே முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில், சொந்த கட்சி நிர்வாகியை அன்புமணி முன்னிலையில் அறைந்து அசிங்கப்படுத்தினார். இதனால் எடப்பாடியாரிடம் கடும் திட்டும் வாங்கிக் கட்டினார் செம்மலை. அப்பேர்ப்பட்டவர் இப்போது ஓவராய் துள்ளுவதும், ’என் வாயிலிருந்து பொய்யே வராது.’ என்று சொல்லி கெத்து காட்டியிருப்பதும் எடப்பாடியார் அணியை எரிச்சலூட்டி இருக்கிறது. 

இந்த நேரத்தில் செம்மலையின் வீடியோவை வைத்துக் கொண்டு கமெண்ட் கிளப்பும் தி.மு.க.வினர் “பொய்யே பேசாத மாஜி செம்மலையே! இங்கே கவனியுங்க கொஞ்சம்....எடப்பாடியார் அணியோடு, பன்னீர் அணி இணைந்தபோது ‘அழுக்குத்தண்ணீரை சுத்தப்படுத்த மருந்து கலப்பது அவசியமல்லவா?’ன்னு பேட்டி கொடுத்து, எடப்பாடியை அசிங்கப்படுத்திய ஆள் நீங்க. அப்படின்னா, எடப்பாடியார் அழுக்குத்தண்ணீர் அப்படின்னு நீங்க அன்னைக்கு சொன்னது உண்மைதானே, அதை இப்பவும் ஏத்துக்குறதானே! இப்பேர்ப்பட்ட நீயெல்லாம் எங்கள் தளபதி ஸ்டாலின் தலைமையை விசாரிப்பதற்கு ஏதாச்சும் அருகதை இருக்குதா?” என்று அவர் பிட்டை அவருக்கே திருப்பிப் போட்டு ஒருமையில் கலாய்த்துள்ளனர். இதை செம்மலை எதிர்பார்க்கவுமில்லை, தாங்கிக்கவும் முடியவில்லை. ஏற்கனவே செம்மலை மீது செக்கச் சிவந்த கோபத்திலிருந்த முதல்வர், இப்போது ஏக காண்டில் இருக்கிறார்.