கிருஷ்ணகிரி திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம்’ என்ற சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காணொலி வாயிலாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசினார். “
இன்றைக்கு ஒரு ஆட்சி இருக்கிறது. அது எல்லா விதத்திலும் தமிழகத்தை பின்னுக்குத் தள்ளிய ஆட்சி. இந்த அராஜக, மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து மக்களை மீட்டாக வேண்டும் என்பதற்காகத் தான் ‘தமிழகம் மீட்போம்’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறோம். தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின் தங்கிவிட்டது என்று நாம் சொன்னால், 'நான் சிறப்பாக ஆட்சி நடத்துகிறேன், எனக்குப் பலரும் பல விருதுகளைத் தருகிறார்கள், ஸ்டாலின் நற்சான்று பத்திரம் தரவேண்டியது இல்லை' என்று சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.


சில நாட்களுக்கு முன்னால் 'இந்தியா டுடே' என்ற பத்திரிகை 'இந்தியாவில் தமிழகம் முதலிடம்' என்று விருது கொடுத்திருப்பதாகத் தமிழக அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டது. எல்லாப் பத்திரிகைகளும் அதனைப் பெரிதாக வெளியிட்டன. அரசாங்கமே கட்டாயப்படுத்தி அதனை வெளியிட வைத்தார்கள். 'இந்தியா டுடே' வெளியிட்ட கட்டுரையை யாராவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முழுமையாக எடுத்துச்சொன்னார்களா என்று தெரியவில்லை. ஏனென்றால், தமிழகம் கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் எப்படி எல்லாம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்றுதான் 'இந்தியா டுடே' பத்திரிகையில் இருக்கிறது. இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களை மட்டும் எடுத்து இந்தியா டுடே பத்திரிகை அளவீடு செய்துள்ளது.
தமிழகம் முதலிடம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமியின் அரசு, இந்த இந்தியா டுடேவின் புள்ளிவிவரத்தில் உள்கட்டமைப்பில் 20-ஆவது இடம், ஒட்டுமொத்த செயல்பாட்டில் 19-ஆவது இடம், விவசாயத்தில் 19-ஆவது இடம், சுற்றுலாவில் 18-ஆவது இடம், உள்ளடக்கிய வளர்ச்சியில் 15-ஆவது இடம், தொழில் முனைவோர் முன்னேற்றத்தில் 14-ஆவது இடம்,  ஆட்சி நிர்வாகத்தில் 12-ஆவது இடம், தூய்மையில் 12-ஆவது இடம்,  சுகாதாரத்தில் 11-ஆவது இடம், கல்வியில் 8-ஆவது இடம், பொருளாதார வளர்ச்சியில் 8-ஆவது இடம், சுற்றுச்சூழலில் 6-ஆவது இடம், சட்டம் ஒழுங்கில் 5-ஆவது இடம் - இதுதான் எடப்பாடி வாங்கிய இடம். கடந்த ஐந்தாண்டுக் காலத்தில், உள்கட்டமைப்பில், செயல்பாட்டில், உள்ளடக்கிய வளர்ச்சியில் 20 மாநிலங்களில் மிக மோசமான மாநிலமாக எது இருக்கிறது என்றால், எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம்தான் இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னால் மடிப்பாக்கத்தில் நிருபர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் மேயராக இருந்தபோது என்ன செய்தார்? உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது என்ன செய்தார்? என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கான பதிலைக் கடந்த 18-ஆம் தேதி அன்று நடந்த தருமபுரி பொதுக்கூட்டத்திலேயே நான் சொல்லிவிட்டேன். மேயராகவும் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தபோது முன்னெடுக்கப்பட்ட திட்டங்களில் சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாகச் சொன்னேன். அது முதலமைச்சருக்குத் தெரியுமா? அல்லது இரண்டு வாரமாகத் தூக்கத்தில் இருக்கிறாரா?
மடிப்பாக்கம் பகுதி முன்பெல்லாம் மிகப்பெரிய அளவுக்குத் தண்ணீரில் மிதக்கும். தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் காரணமாகத்தான் அது தடுக்கப்பட்டது. இதனை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஸ்டாலின் என்ன செய்தார் என்று நிருபர்களிடம் கேட்கும் பழனிசாமி அவர்களே, அதனைப் பொதுமக்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!


சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க புதிய திட்டங்களைப் போடப் போவதாக எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க. என்ன செய்தது? இப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் இவர் தூங்கிக் கொண்டு இருந்தாரா? 2015-ஆம் ஆண்டு வெள்ளம் வந்ததே அதன்பிறகாவது இந்த அரசு விழித்துக் கொண்டதா? கடந்த நான்கு ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார்? நான்கு மாதத்தில் ஆட்சியே முடியப் போகிறது. இதுகூடத் தெரியாமல், புதிய திட்டம் போடப்போவதாகப் பந்தாக் காட்டிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. புதிதாகத் திட்டங்களைத் தீட்டப் போகிறோம் என்று சொல்லும் பழனிசாமி, நிதி இல்லை என்றும் சொல்கிறார். அப்படியானால், இவற்றில் எது உண்மை?


வாய்க்கு வந்ததைப் பேசுவதுதான் பழனிசாமியின் வழக்கம். நிருபர்கள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அது சம்பந்தமான தகவல் இருக்கிறதோ இல்லையோ, குத்து மதிப்பாக ஏதாவது சொல்லி தப்பித்துவிடுவது அவரது பாணி. ஆனால், இவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பழனிசாமி மறக்கலாம்; மக்கள் மறக்கமாட்டார்கள்! அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றி இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை.
அ.தி.மு.க. ஆட்களுக்கு இது டெண்டர் ஆட்சி! தமிழ்நாட்டு மக்களுக்கு இது தெண்ட ஆட்சி! இந்த டெண்டர் ஆட்சிக்கும், தெண்ட ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எல்லா நிலத்திலும் பயிரும் இருக்கும், களையும் இருக்கும். ஒரு விவசாயி, அந்தக் களையை முதலில் எடுத்துக் களைவார். அதன்பிறகுதான் பயிர் சரியாக வளரும். அதேபோல் தமிழ்நாட்டு அரசியலில் உருவான களைகள்தான் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சர்களும். இந்தக் களைகளை அகற்றாமல் தமிழ்நாட்டைச் செழிக்க வைக்க முடியாது. இந்தக் களைகளை அகற்றும் தேர்தல்தான் சட்டமன்றத் தேர்தல். தமிழக அரசியல் களத்தில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் வளர்ந்து வரும் எடப்பாடி பழனிசாமி கும்பல் என்ற களையைக் கோட்டையிலிருந்து களையவேண்டும்.” என்று ஸ்டாலின் பேசினார்.