போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 96 சதவிகித ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் போராட்டம் கிட்டத்தட்ட தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. 

ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அடுத்த கட்டமாக, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 447 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்களது பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. அந்த பணியிடங்களுக்கு விருப்பப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியிடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று பணிக்கு திரும்பிய ஆசிரியர்களுக்கு, காலியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் அவர்கள் விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேரில் 5 ஆயிரம் பேர் நேற்று பணிக்குத் திரும்பியிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது. தொடக்கக் கல்வித்துறையில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 836 ஆசிரியர்களில் 50 ஆயிரத்து 288 பேர் மட்டுமே பணிக்கு திரும்பினர்.

 

4341 பேர் அனுமதி பெற்று விடுப்பில் இருப்பதாகவும், 96 ஆயிரத்து 207 பேர் அனுமதியின்றி விடுமுறை எடுத்துள்ளதாகவும் தொடக்க கல்வித்துறை கூறியிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீதமுள்ள ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் 96 சதவிகிதம் பேர் பணிக்கு திரும்பி இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால், ஆசிரியர்களின் போராட்டம் கிட்டத்தட்ட தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.