தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் என்ற பெயரில் பிரமாண்ட ஜெபகூட்டம் நடத்தி வருபவர் போதகர் மோகன்சி லாசரஸ். அவர் இந்துக்களை மதமாற்றம் செய்யும் நோக்கில் அவ்வப்போது சர்ச்சையாக பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் அப்படியொரு வீடியோ பரவலாகி வருகிறது. அதில், ’’இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் தமிழ்நாட்டைப் போல சாத்தானின் அரங்குகள் கிடையாது. அதை அறிந்துகொள்ளவேண்டும். தமிழ்நாட்டில்தான் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத பெரிய பெரிய கோயில்கள் உள்ளன. வட இந்தியாவிற்கு சென்றால் பிர்லா மந்திர் இருக்கும் அது ஒன்று தான். அதை பிர்லா கம்பெனிக்காரர்கள் கட்டியது. அவர்களுடைய புகழுக்காக அதை கட்டினார்கள்.  மற்றபடி அமிர்தசரஸ் சென்றால் ஒரு கோயில் சிலைகள் இருக்கும்.

தமிழ்நாட்டு அளவிற்கு இவ்வளவு பெரிய கோபுரங்கள் எங்கும் இல்லை. இவ்வளவு இடங்கள் வேறு எங்கும், எந்த மாநிலத்திலும் கிடையாது. ஏனென்றால் தமிழ்நாட்டை சாத்தான் குறி வைத்து தாக்குகிறான். தேவன் எனக்கு நிறைய காரியத்தை விளக்கியுள்ளார். ஒவ்வொரு இடங்களில் எப்படி எல்லாம் தன்னுடைய  எல்லைகளை சிறப்பித்திருக்கிறான் என எல்லாவற்றையும் கவனிக்க முடிந்தது. கும்பகோணம் போனால் நாம் கிரகிக்க முடியாத அளவுக்கு சாத்தான் அங்கு வியாபித்திருக்கிறது. அதனால்தான் அங்கு அத்தனை கோயில்கள் அத்தனை இடங்கள் இருக்கின்றன.

 

காஞ்சிபுரம் சென்றேன். அங்கே சென்றபோது அங்கே சங்கரமடம் சென்றேன். அதற்குள் போக ஆண்டவர் வாய்ப்புக் கொடுத்தார். நான் உள்ளே சென்றேன். இரண்டு பேர் இருந்தார்கள். அவர்கள் யாகம் செய்தார்கள். பட்டு சேலை, பட்டு வேஷ்டி எரித்து யாகம் செய்கிறார்கள். யாகம் செய்து அவர்கள் காலில் விழுந்து வணங்குகிறார்கள். என்னவென்று பார்த்தால் மனித வணக்கம் தான். அவர்கள் வெளியில் சொல்வது தான் அந்த கோபுரம், சக்தி எல்லாம். மனுச வணக்கம் தான் அங்கு பிரதானம். அவர்கள் மனிதர்களை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார்கள். இதுபோல ஏராளமான ரகசியங்களை தெரிந்து கொள்ள முடிந்தது’’என அவர் பேசியுள்ளார்