துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணை புரியும் சகோதரியாக இருப்பேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை;- பதவிப்பிரமாணத்தின் போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு என்றார். தமிழ் புறக்கணிக்கப்படுவதில்லை, தமிழுக்கான அதிகாரம் என்றும் இருக்கும். துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணை புரியும் சகோதரியாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். 

தெலங்கானா, புதுச்சேரி என இரட்டைக் குழந்தைகளை கையாளும்திறன் மருத்துவரான எனக்கு உள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் குறைவாக இருப்பது வேதனையளிக்கிறது.  நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில், நாமே தயக்கம் காட்டக் கூடாது என்றார். 

துணைநிலை ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது எனக்குத் தெரியும். அரசின் பெருபான்மை குறித்து எதிர்க்கட்சிகள் அளித்த புகார் தொடர்பான கோப்பை பார்க்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து அனைவரையும் ஆலோசித்து சட்டப்படி முடிவெடுப்பேன். ஆளுநரை மக்கள் எளிதில் சந்திக்கக் கூடிய வகையில் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.