தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தற்போது தன்னுடைய வழக்கமான பண்பின் படி சென்னையில் இருந்து தொடர்பு கொள்ளும் செய்தியாளர்களிடம் நலம் விசாரிக்கிறார்.

கடந்த ஞாயிறன்று தெலுங்கானாவின் ஆளுநராக தமிழிசை பதவி ஏற்றார். அதே நாளில் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து தனது பணிகளை தொடங்கினார். அதன் பிறகு கடந்த இரண்டு நாட்களாக ஆளுநர் மாளிகையை சுற்றிப்பார்த்து அங்கிருக்கும் விஷயங்கள், அம்சங்கள், மரபுகள் உள்ளிட்டவை குறித்து தமிழிசை தெரிந்து கொண்டார். 

மேலும் ஆளுநர் மாளிகையில் உள்ள பணியாளர்கள் அனைவரையும் சந்தித்து அவர்கள் குறித்து விசாரித்துள்ளார். மேலும் தன்னுடைய வசதிக்காக சென்னையில் இருந்து சிலரையும் பணியாளர்களாக அழைத்துச் சென்று ஐதரபாத் ஆளுநர் மாளிகையில் தங்க வைத்துள்ளார் தமிழிசை. தினமும் காலையில் எழுந்து வழக்கம் போல் யோகா, உடற்பயிற்சி என்று தன்னுடைய தினசரி பணிகளை தமிழிசை தொடங்கிவிடுகிறார்.

பிறகு தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் தொழில் அதிபர்கள், பிரபலங்கள், அதிகாரிகளை சந்தித்து அவர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார். இது தவிர அவ்வப்போது அரசியல் நிகழ்வுகள் குறித்தும் செய்திகளை பார்த்து தெரிந்து கொள்கிறார். தெலுங்கானா அரசியல் நிலவரம் குறித்து தற்போது அம்மாநிலத்தை சேர்ந்த முக்கிய பாஜக தலைவர் ஒருவர் தான் தமிழிசைக்கு பாடம் எடுத்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

 

இவர்கள் தவிர, டெல்லி பாஜக மேலிடம் தமிழசைக்கு அரசியல் விவகாரங்களில் உதவி ஒரு முக்கிய புள்ளியை அமர்த்தியுள்ளதாக சொல்கிறார்கள். அவர் டெல்லியில் இருந்தபடி ஒரு நாளைக்கு மூன்று முறை தமிழிசையிடம் பேசுவதாக கூறிக் கொள்கிறார்கள். இதற்கிடையே சென்னையில் இருந்து தொலைபேசி அழைப்பு என்றால் உடனே ஆளுநர் தமிழிசை நேரடியாக எடுத்து பேசுகிறார். அதுவும் செய்தியாளர்கள் என்றால் வழக்கம் போல் உற்சாகமாக பேசுகிறாராம். 

ஆளுநர் பதவி எப்படி இருக்கிறது மேடம் என்று செல்போனில் தொடர்பு கொண்டு ஒரு இளம் செய்தியாளர் கேட்டுள்ளார். அதற்கு ரொம்ப போர் அடிக்குது தம்பி மாளிகைக்குள்ளேயே இருக்க வேண்டியிருக்க, ரொம்ப புரோட்டகால் இருக்கு என்று கூறி சிரித்துள்ளார் தமிழிசை. மேடம் இன்னும் அப்டியே தான் இருக்காங்க என்று தன்னுடைய சக பத்திரிகையாளர்களிடம் வறி வருகிறாராம் அந்த இளம் பத்திரிகையாளர்.