தெலுங்கானாவில் பழங்குடியினரின மக்களுடன் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தை சேர்ந்த தமிழிசை தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டது முதல் தெலுங்கு பேசியும், பாடல்களை பாடியும் அசத்தி வருகிறார். இந்நிலையில், நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தெலங்கானா ஆளுநர் மாளிகையில் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு பகுதியில் உள்ள பழங்குடியின கிராமங்களையும் நேரில் சென்று பார்வையிடுவது, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அறிந்து அதனை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.

Scroll to load tweet…

மருத்துவ மாணவியாக இருந்தபோது தனது தோழிகளுடன் அந்தமான் தீவுகளில் உள்ள பழங்குடியினரை நேரில் சந்தித்து அடிப்படை சுகாதார சேவைகளை செய்துள்ளதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். மேலும் முலுகு மாவட்டத்தில் பழங்குடியினருக்கான பல்கலை.யை ஏற்படுத்த மத்திய அரசுடன் போச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும் கூறினார்.

பழங்குடியினரிடம் இருந்து அரிய வகை மருத்துவ குணம் கொண்ட மூலிகை வகைகள் தொடர்பான தகவல்களை சேகரித்து ஆவணப்படுத்தவும், மூலிகை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்குமாறு அக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, பத்ராச்சலம் மற்றும் நாகர்கர்ணூல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கோயா மற்றும் லம்பாடா பழங்குடியின சமூகத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.