மக்களவை தேர்தல் தோல்வி அடைந்ததையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைய முடிவு செய்துள்ளனர். 

119 உறுப்பினர்களை கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 88 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால், அக்கட்சி நிர்வாகிகள் தொடர்ச்சியாக பதவி விலகி வருகின்றனர். 

இதனிடையே மக்களவைத் தேர்தலில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, நல்கொண்டா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் பலம் 18-ஆக குறைந்தது. இந்நிலையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைய உள்ளதாக சபாநாயகா் போச்சாராம் ஸ்ரீனிவாஸ் ரெட்டியிடம் கடிதம் வழங்கி உள்ளனா்.

 

ஏனெனில் கட்சித்தாவும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் வகையில் சட்டத்தில் இடம் உள்ளது. தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சபாநாயகரிடம் உள்ளதால் எம்.எல்.ஏ.க்கள் இவரை சந்தித்துள்ளனர். சபாநாயகர் சந்திப்பை தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விரைவில் ஆளுநர் நரசிம்மனை சந்திக்க உள்ளனர். இதனால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.