பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களில் கடந்த வாரம் 447 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மேலும் 600 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மற்றும் பணிக்கு வராத ஆசிரியர்கள் 600 பேரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசின் எச்சரிக்கையையும் மீறி, நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.   இந்நிலையில் கடந்த காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 25-ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரசுப்  பணியாளர் நடத்தை விதிகளின்படி ஒருவர் கைதாகி நீதிமன்றத்தில் 48 மணி நேரம் இருந்தால் அவரை பணியிடை  நீக்கம் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் 447 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டிருந்தார். 

தொடர் எச்சரிக்கையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேலும் 600 ஆசிரியர்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 1047 ஆசிரியர்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்களின் பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்கள் மூலமாக நிரப்பப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.