தமிழகத்தில் தற்போதுள்ள தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது தான் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் மிக முக்கியமான திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தின் ஒரு அம்சமாகவே தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க போராட்டம் அறிவித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. கடந்த வாரம் டெல்லி வந்து சென்றார் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே. வந்தவர் கொளுத்திப் போட்டுச் சென்றது தான் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணியை தீர்மானிக்கும் ஒரு விஷயமாகிவிட்டது. 

அதாவது, 2009ம் ஆண்டு இறுதிகட்ட ஈழப்போரின் போது இந்தியா மட்டும் உதவி செய்யவில்லை என்றால் எங்களால் விடுதலைப் புலிகளை வெற்றி பெற்று இருக்கவே முடியாது என்று ராஜபக்சே பேட்டி கொடுத்துவிட்டு சென்றார். இந்த பேட்டி தான், தமிழகத்தில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை உடைப்பதற்கான பா.ஜ.க.வின் பிரம்மாஸ்திரம் என்று சொல்லப்படுகிறது. அதாவது கடந்த 2009ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்தது தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி அரசு. அந்த அரசு தான் விடுதலைப்புலிகளை வீழ்த்த எங்களுக்கு உதவியது என்று இப்போது கூறிவிட்டு சென்றுள்ளார் ராஜபக்சே.

 

இந்த பேட்டியை சுட்டிக்காட்டி தான் தி.மு.க – காங்கிரசுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்துள்ளது. அ.தி.மு.க.  கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி அமையாமல் போனதற்கு முழு முதற் காரணம் ஈழத்தமிழர் விவகாரம் தான். ஈழத்தமிழர் விவகாரத்தில் காங்கிரசின் துரோகத்திற்கு தி.மு.க துணைபோனதாக முன்வைக்கப்பட்ட விமர்சனத்தை தொடர்ந்தே இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி முறிந்தது. தற்போதும் இந்த விவகாரத்தை எழுப்புவதன் மூலம் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை உடைக்க முடியும் என்று பா.ஜ.க கருதுகிறது.

 

இதற்காகவே டெல்லி வந்த ராஜபக்சேவை மீண்டும் காங்கிரசுக்கு நன்றி சொல்ல வைத்துள்ளது பா.ஜ.க. இதே போல், தமிழகத்திலும் அ.தி.மு.க தலைவர்களுக்கு தி.மு.கவிற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கும்படி யோசனை கூறியதும் பா.ஜ.க மேலிடம் தான் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க தங்களுடன் கூட்டணிக்கு வர வேண்டும், இல்லை என்றால் காங்கிரசுடன் கூட்டணி இருக்க கூடாது என்பது தான் பா.ஜ.கவின் நிலைப்பாடு என்று சொல்லப்படுகிறது. இதனை மனதில் வைத்தே பா.ஜ.க தற்போது தமிழகத்தில் காய் நகர்த்த தொடங்கியுள்ளது. இல்லை என்றால் ஆளும் கட்சியான அ.தி.மு.க ஏன் திடிரென எதிர்கட்சியான தி.மு.கவிற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்த வேண்டும் என்று கிசுகிசுக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.