தமிழகத்தில் கலவரம் நடந்தால், அதற்கு எச்.ராஜாவும் கல்யாணராமனுமே முழுமுதற் காரணம் என்று எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்,


மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எச்.ராஜாவை விமர்சனம் செய்தார். “பாஜகவின் ஹெச். ராஜா, கல்யாணராமன் ஆகியோர் ட்விட்டர் மூலம் மக்களிடையே மதக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்கள். தமிழகத்தில் கலவரம் நடந்தால், அதற்கு இவர்கள்தான் முழுமுதற் காரணம். டெல்லியில் பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா பேசிய பிறகுதான் வன்முறை நிகழ்ந்தது. அதுபோல, தமிழகத்தில் நிகழாமல் இருக்க முன்கூட்டியே போலீஸார் விழிப்புடன் செயல்பட வேண்டும்.


மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் கருப்புச் சட்டங்களான குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை ஜனநாயக அமைப்புகளுடன் அறவழியில் போராட்டங்கள் தொடரும்.  சி.ஏ.ஏவுக்கு எதிராக கோவையில் எங்கள் கட்சியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக அமைப்புகளின் தலைவர்கள் எல்லோரும் பங்கேற்க உள்ளனர்” என தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.