பாஜகவுடன், அதிமுக கூட்டணி சேர்ந்ததற்கு இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.


அதிமுகவுடன் பாஜக கூட்டணி உறுதியான நிலையில், அந்தக் கட்சியின் கூட்டணியில் இருந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி விலகுவதாக அதன் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
   
சென்னை அடையாரில் உள்ள கிரவுண் பிளாஸா ஓட்டலில் நடைபெற்ற அதிமுக - பாஜக கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில், மக்களவை தேர்தல் கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலும், முரளிதரராவ், தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான நிலையில், மனிதநேய ஜனநாயகக் கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சற்றுமுன் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே, அதிமுக - பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்சியிலிருந்து வெளியேறுவோம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில், தமிமுன் அன்சாரி இந்த முடிவை அறிவித்துள்ளார். கடந்த சட்டன்மன்றத் தேர்தலில் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் அதிமுக சின்னத்தில் நின்று வெற்றிபெற்றனர். 

ஏற்கெனவே எம்.எல்.ஏ. கருணாஸ் கடந்த சில தினங்களுக்கு முன் ஐந்தாண்டுகள் வரை எடப்பாடி அரசுக்கு ஆதரவளிப்பதாக கூறினார். இந்நிலையில் தனியரசு மட்டும் இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதிமுக தமிமுன் அன்சாரியின் முடிவால் மேலும் சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறது.