தமிழ் நாட்டில் இனி வரும் காலங்களில் எந்த அரசு நிறுவனத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாமல்  எந்த விழாவும் நடைபெறக்கூடாது என்ற நிலை உருவாக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 
சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி. 60-ம் ஆண்டு வைரவிழாவில்  தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படாது என்று நிகழ்ச்சி நிரலில் உணர்த்தப்பட்டிருந்தது. தொடக்கத்தில் வந்தே மாதரமும்,. இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தாய் இடம்பெறாது என்ற தகவல் சர்ச்சையானது. தமிழ்த் தாய் வாழ்த்து பாடப் படாமல் புறக்கணிக்கப்படுவதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து நீண்ட அறிக்கையும் வெளியிட்டார்.

 
அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடைபெறும் எந்தவொரு அரசு விழாவாக இருந்தாலும், பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும் விழாவாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்பது விதி. இதுகுறித்து இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு நன்றாகத் தெரியும். என்றாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க வைர விழாவில்  தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவது தமிழுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அவமதிப்பு” என்று ராமதாஸ்தெரிவித்திருந்தார்.

 
இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டியில் இன்று மாலை வைரவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.தமிழ்த் தாய் வாழ்த்தை வைத்து எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தாய் வாழ்த்தையும் ஐஐடி நிர்வாகம் சேர்த்ததாகக் கூறப்படுகிறது.


இதற்கிடையே வைரவிழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவில், “சென்னை  ஐ.ஐ.டியில் இன்று மாலை நடைபெற்ற வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. விழாவின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாத நிலையில், நான் விடுத்த எச்சரிக்கைக்கு பணிந்து  தமிழ்த்தாய் வாழ்த்து  பாடப்பட்டிருக்கிறது. இது பா.ம.கவுக்கு கிடைத்த வெற்றி. தமிழ் வாழ்க!” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
மற்றொரு ட்விட்டர் பதிவில், “தமிழ் நாட்டில் இனி வரும் காலங்களில் எந்த அரசு நிறுவனத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாமல்  எந்த விழாவும் நடைபெறக்கூடாது என்ற நிலை உருவாக வேண்டும். இதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்!” என்றும் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.