தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்று இன்று உச்ச நீதிமன்றம் அறிவிக்க உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள பாஜக சார்பில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் ஊராட்சிகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமென்று மாநில  தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 15 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகன் வெளியிட்டுள்ளார்.


இக்குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்களாக இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், பொது செயலாளர்கள் கே.எஸ்.நரேந்திரன், எஸ்.மோகன்ராஜூலு, கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், துணை தலைவர்கள் சுப.நாகராஜன், நயினார் நாகேந்திரன், சிவகாமி பரமசிவம், மாநில செயலாளர் எஸ்.கே.வேதரத்தினம், மகளிர் அணி தலைவர் ஏ.ஆர்.மகாலட்சுமி, எஸ்.சி. அணி தலைவர் எம்.வெங்கடேசன், முன்னாள் எம்பி எஸ்.எஸ்.ராமதாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


பாஜகவில் தேர்தல் குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குழுவில் முன்னாள் தலைவர் தமிழிசையின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தமிழிசை  தலைவராக இருந்தபோது அவருடைய ஆதரவாளர்களாக இருந்தவர்கள் இக்குழுவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழிசை ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.