Asianet News TamilAsianet News Tamil

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு.. அப்ரண்டிஸ் முடித்த தமிழர்களுக்கு வேலை கொடு.- சீமான்.

இவ்வாண்டில் மட்டும் அந்நிறுவனத்தில் இரண்டு பெரும் விபத்துகள் ஏற்பட்டு பதினைந்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். முறையாகப் பயிற்சி பெற்ற தொழிலாளர்களைப் பணியமர்த்தப்படாததால்தான் அவ்விபத்துகள் நேரிட்டது என தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

Tamils ignore by Neyveli Coal Company .. Give job to Tamils who have completed apprenticeship.- Seeman.
Author
Chennai, First Published Jan 6, 2021, 12:12 PM IST

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை உடனடியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம்: 

பெருந்தமிழர் ஜம்புலிங்கனாரின் பெருங்கொடையாலும், பெருந்தலைவர் காமராசரின் சீரிய முயற்சியாலும் 1956 ஆம் ஆண்டு தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதற்காகவும் தமிழகத்தின் வளத்தை மூலதனமாகக்கொண்டு தமிழர்களின் கடுமையான உழைப்பாலும், ஈடு இணையற்ற தியாகத்தாலும் உருவானதே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம். இந்நிறுவனமானது தமிழ்நாடு, கேரளா கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் பல மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கும் நிறுவனமாக, கடந்த 65 வருடங்களுக்கு மேலாகத் திகழ்ந்து வருகிறது. 5192 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்நிறுவனத்தின் ஆண்டு நிகர இலாபம் 2378 கோடியாக உள்ளது. இந்நிறுவனத்தில் 5000க்கும் மேற்பட்ட மேற்பார்வைப் பொறியாளர்களும், 12000க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களும், 13000க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் வேலைசெய்து வருகின்றனர். இந்நிறுவனத்தைத் தொடங்குவதற்காகவே நெய்வேலியைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வந்த பூர்வகுடித் தமிழர்கள் தங்கள் சொந்த நிலத்தை முழுவதுமாக விட்டுக்கொடுத்தனர். 

Tamils ignore by Neyveli Coal Company .. Give job to Tamils who have completed apprenticeship.- Seeman.

ஆனால், இன்று அதே நிறுவனத்தில் அப்பகுதி மக்கள் அடிமாட்டுக்கூலிகளாக வேலைசெய்யக்கூடிய அவலநிலைதான் உள்ளது. அந்தளவுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி, அவர்கள் அதிகாரம் செலுத்துகின்ற இடமாக மாறியுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் தமிழர் அல்லாதவர்களே நியமிக்கப்பட்டு மண்ணின் மைந்தர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வரும் சூழல் நிலவுவதும் கண்கூடாகத் தெரிகிறது. இன்றளவும் இந்நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வெறும் ஒப்பந்தத்தொழிலாளர்களாகவே பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்தப்படி, நிலம் வழங்கிய குடும்பங்களின் உறவுகளுக்கே பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்குப் பணி வழங்கப்படாமலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கும் அந்நிர்வாகத்தின் செயல்பாடானது அந்நிலத்தில் வாழும் மக்களுக்குச் செய்யப்படும் பச்சைத்துரோகமாகும். 

Tamils ignore by Neyveli Coal Company .. Give job to Tamils who have completed apprenticeship.- Seeman.

இவ்வாண்டில் மட்டும் அந்நிறுவனத்தில் இரண்டு பெரும் விபத்துகள் ஏற்பட்டு பதினைந்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். முறையாகப் பயிற்சி பெற்ற தொழிலாளர்களைப் பணியமர்த்தப்படாததால்தான் அவ்விபத்துகள் நேரிட்டது என தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகவே, இனிமேலாவது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் முறையாகத் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மண்ணின் மைந்தர்களாகிய தமிழர்களை உடனடியாகப் பணிக்கு அமர்த்த வேண்டும் என்பது அம்மண்ணின் மக்களின் நீண்ட நெடுநாள் கோரிக்கையாகும். அதனை வலியுறுத்தி தற்போது நடைபெறும் போராட்டங்களங்களில் நாம் தமிழர் கட்சி பங்கேற்று, அவர்களின் கோரிக்கைக்கு வலிமைசேர்க்கும் என இத்தருணத்தில் உறுதியளிக்கிறேன். இதில் தமிழக அரசு உடனே தலையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios