முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது, மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது தெரிந்தது.

இதைதொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பல்வேறு பூஜைகள், பரிகாரங்கள், யாகங்கள் நடத்தி பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதற்கிடையில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட ஏராளமானோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்து செல்கின்றனர்.
இதற்கிடையில், முதலமைச்சர் ஜெயலலிதா, உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவர்களை, போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து வதந்தி பரப்பினால் கைது செய்யும் நடவடிக்கை எடுத்துள்ள போலீசார், அதிமுகவினர் கொடுக்கும் புகார்களை வாங்கிக் கொண்டுத, இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் மிகக் கொடுமையானது கோவையில் 2 வங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்டது.
ஜெயலலிதா குறித்து பேசிய ஒரே குற்றத்திற்காக அதிமுக பெண் பிரமுகர் ஒருவர் புகார் கொடுத்தார் என்று கூறி 2 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கக் கூடிய சட்டப் பிரிவை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இதற்கு தமிழக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்தக் கைதுகளை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜுவும் இதைக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாகமற்றொரு பதிவையும் செய்துள்ளார்.

அதில், உடனடியாக தமிழகம் முழுவதும் இந்த சட்டவிரோத கைதுகளை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் போராட வேண்டும். மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு.கோழைகள்.
அரசியல் சாசனம் தங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை சிவில் உரிமையைக் கூட காக்கத் தெரியாத கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும். இந்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக போராடக் கூட முடியாத கோழைகள் என்றுதான் நான் சொல்ல வேண்டி வரும் என குறிப்பிட்டுள்ளார்.
